பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறைந்த ஜோதி

முத்தனைப் போல் ஆன்ம ஒளி
மூண்டு நின்ற மோகனனைச்
சத்துருவொன் றறியாத
சாதுவினை யிழந்தோமே !

புழுதியிலே தான்கிடந்து
புரண்டழுத மக்களையே
விழித்தெழுந்து தலை நிமிர்ந்து
மேன்மையுறச் செய்தவனைப்
 
பழியில்லா அறவழியால்
பாரதத்தை மீட்டவனை
இழந்தாயே எந்நாடே
இணையில்லாத் தந்தையினை!

பாருக்கு வழிகாட்டும்
பாரதமென் றேவுனைத்தான்
ஆருரைப்பார் இனிமேலே
அகலாத பழிகொண்டாய்.

வீரத்தின் விளக்கவிய
வெறியிங்கே தோன்றியதே !
தீராத கறையுனக்குச்
சேர்ந்ததுவே என் தாயே!
 
அன்பிற்கே உயிர் வாழ்ந்தான்
அன்பிற்கே உயிரீந்தான்
அன்புப் புதுச் சுடராய்
அகல் வானில் நின்றிடுவான்;

48