பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதில்

வானில் தனித்திலங்கும் வண்ணப் பிறைபோல்
           வளரும் அழகுடைய மங்கை நல்லாளே
ஏனிந்தக் காதலென்மேல் என்று கேட்கிறாய்
     ஏதும் பதிலறியா தேங்குகின்றேன் நான்.
    
மாலை இளவெயிலில் சோலை தனிலே
      வந்ததும் கண்டதும் காதல் கொண்டதும்
மேலும் அது வளரும் காரணத்தையும்
       விளம்ப வகையுமுண்டோ மின்னற்கொடியே ?
     
வீணை நரம்பினிற்கும் மெல்லிசைக்குமே
     விரியும் தொடர்புசொல வாசக முண்டோ ?
தேனை அகத்துள் வைத்த செவ்வி மலர்க்கும்
      தினகர னுக்கும் உள்ள காந்தம் என்னவோ ?

சோர்விற் சுழலுகின்ற கண்கள் தமக்கும்
      தூக்கம் அதற்கு மென்ன சொந்தம் சொல்லுவாய்?
ஆர்வமுடன் மகவின் கூவல் கேட்டதும்
      அம்மம் சுரக்கும் வகை யாரறிவாரோ ?

ஓடும் புனல் தனக்கும் ஓங்கும் ஓதைக்கும்
    உற்ற பொருத்தமதை ஓதலாகுமோ ?
நாடி உனை நினைந்தே வாடுகின்றேனே
     நல்ல மொழி எனக்குச் சொல்லிடு வாயே.

                             59