பதிப்புரை
தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, ஒரு மொழி இலக்கியம் மட்டு மன்று. அது ஒரு தனிப் பண்பாடு, உலகின் முதல் தேசீயம், முழுநிறை தேசீய இனம். அதன் விரிவாக அமைபவையே தென்னகத் தேசீயம், இந்தியத் தேசீயம், ஆசியாவின் பண்பாடு, அகல் உலகின் மனித இன நாகரிகம்! மனித இனம் ஒரு பெருங் கோயிலானால், தமிழகம் அதன் கருவறை (கர்ப்பக்கிருகம்).
உலக வரலாற்றுக்கு வரலாற்றொளி தரும் இத் தமிழக வரலாற்றை, இக்குறிக்கோள்கள் நனி விளங்க எடுத்துக் காட்டுகிறது, தன்னாட்டுப் போர்க்களங்கள் என்ற இவ் வரலாற்றேடு. இது வெறும் ஆயுதப் போர்க்களங்களின் வரலாறு மட்டுமன்று, பண்பாட்டுப் போர்க்களங்களின், வாழ்க்கைப் போராட்டங்களின் வரலாறாகவும் விளங்குகிறது.
விடுதலை பெற்ற இந்தியாவில், நல்ல தமிழ்த்தேசீய கட்சி கண்ட தமிழகத்தில், இனி எழுதப்பட வேண்டிய மெய்யான வரலாற்றிலக்கியத்துக்கு ஒரு மூலமாக, முதலேடாக இது அமைந்துள்ளது.
இதன் ஆசிரியர் பண்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை எம். ஏ. (தமிழ்). எம்.ஏ. (ஆங்கிலம்). விசாரத் (இந்தி) எல். டி. தமிழக, இந்தியத் தேசீய இயக்கங்களுடன் ஊடாடியவர். அவற்றின் மொழி, கலை, இலக்கியத்துறைப் பேராளராக இலங்குபவர். இவ் ஏட்டின் மூன்றாம் பதிப்பையும் பிற எல்லாப் புத்தேடுகளையும் எம் பதிப்பாக வெளியிட அவர்கள் இசைந்தமைக்கு யாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆசிரியருடன் சேர்ந்து நாட்டுக்கும் மொழிக்கும் பாடுபட்டுவரும் எம் பதிப்பகத்தின் இவ்வெளியீட்டையும் பிற வெளியீடுகளையும் மாணவரும் மக்களும் மக்களாட்சியும் ஆதரித்து ஊக்குமாறு வேண்டுகின்றோம்.
அலமேலு நிலையத்தார்.