முகப்புரை
வடதிசை நாகரிகமாகிய அரை இருளும், மேலை நாகரிகமாகிய அரை யொளியுமே இன்றைய தமிழரால் - கற்றறிந்த தமிழரால் கூட-ஒளியாகக் கொண்டு பின்பற்றப் படுகின்றன. வருங்கால உலகம் பெறவேண்டும் முற்றொளிக்கு இவை படிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழக அளவில் இந்த அரையிருள், அரை ஒளிகளைவிட, முற்காலத் தமிழகத்தின் முழுநிலவொளி அவ் வருங்கால முழுக் கதிரொளி காணும் வகையில் இன்னும் உயர்ந்த படியாக உதவுவது ஆகும். வட திசை நாகரிகத்தையும் மேலை நாகரிகத்தையும் சரியான முறையில் நாம் பயன்படுத்துவதானால், அவை முற்காலத் தமிழர் நில வொளிக்கும் வருங்கால உலகின் கதிரொளிக்கும் இட்டுச் செல்லும் தகுதியுடையன என்பது உறுதி. ஆனால் வடதிசை, மேல்திசை, பண்டை த் தமிழகம், வருங்கால உலகம் என்ற படிகளைத் தலை கீழாக்கி இடைக்கால வடதிசையின் பிற்போக்கு வழியில் சறுக்குவதே இன்றைய இந்திய மாநில ஆட்சிக்கும், மாநில நாகரிகத்துக்கும் உரிய ஒரு பெரிய மாய் இடராக உள்ளது. மேலை நாகரிகத்தை அயல் நாகரிக மாகவும், வடதிசை அடிமை இருட்கால நாகரிகத்தை அக உரிமை நாகரிக மாகவும் கொள்ளும் வட திசையின் இன்றைய போக்குத் தமிழரை மட்டுமன்றி உலகையும் இருளை நோக்கியே இட்டுச் சென்று வருகிறது. தமிழக வரலாறு, தமிழகப் பண்பாடு, தமிழக இலக்கியம் ஆகியவற்றின் ஆராய்ச்சி இன்னும் தமிழகத்திலேயே ஆட்சி வகுப்பினர், பத்திரிகைகள், கல்வி நிலையங்கள், கல்லூரி, பல்கலைக் கழகங்கள் ஆகியவை அக்கரை கொள்ளாத, கண்ணெடுத்தும் பாராத துறைகளாய் உள்ளன. உலக வரலாறு கூட, பள்ளி கல்லூரிகள் பற்றிய மட்டில் இன்னும் ஒன்றிரண்டு மேலை நாடுகளின் ஆதிக்க வேட்டை வரலாறாக உள்ளதே யன்றி, 'ஓருல' இனவரலாறாகக் கருத்துருவாகவில்லை. அக் குறிக்கோளை 'ஓருலக அவை' (ஐக்கிய நாடுகள் சங்கம்) கொடி யாகத் தூக்கி யுள்ளது என்பது உண்மையே. 'உலக மக்கள்' என்ற குரல் எழுப்பப் பட்டுள்ளதும் உண்மையே. ஆனால் உலக அவையின் ஆட்சி உறுப்பினர் இன்னும் நாட்டாதிக்க அரசுகளும் ஆதிக்க நாடுகளும் மட்டுமே. மக்கள் நேரடிப் பேராட்சி இன்னும் அதைத் தீண்டவில்லை. அது மட்டுமன்று. உலகக் குறிக்கோளை முதன் முதலில் உலகில் உயர்த்திய இனம், வள்ளுவர் இனம், தமிழினப் பண்பாடு அதில் இடம் பெறவில்லை. ஆதிக்க இனங்கள், நாடுகளைக் கட்டுப்படுத்த, மொழி இன சமன்மைகாக்க இன்னும் வகை காணப்படவில்லை. இந் நிலையில் இன்றைய உலகக்