பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

குறிக்கோள் 'தமிழக மில்லாத ஒரு உலகக்குறிக்கோள் மட்டுமல்ல, 'தமிழினம்' போன்ற ஆதிக்க மற்ற, உரிமை யற்ற இனங்களை விலக்கி வைத்த ஓர் உலகக் குறிக்கோளாகவே உள்ளது; பண்டை நாகரிக இனங்கள் பலவும் இல்லாத இடைக்கால நாகரிகங்களின் மேற் பூச்சு உலகமாகவே உள்ளது.

தமிழகத்தின் முழு நிறை வரலாறு. வகுத்துக் காண்பது என்பது எளிதன்று. மேல் திசைத் தொடர்புகளிலிருந்தும், மேல்திசை வடதிசையாளர் மேற்கொண்டுள்ள பழம் பொருளாராய்ச்சி, மொழியாராய்ச்சி, கல் வெட்டாராய்ச்சிகளின் உதவிகொண்டும் உலகின் பெரும் பகுதியின் வரலாறும் எழுதப்பட்டு வருகின்றது. இவ் வரலாறுகள் இயற்றியவர் தமிழ், தமிழினம், தமிழகம் ஆகியவை பற்றி எதுவும் அறியாதவர், அறிய முடியாதவர்; அவ் வழி நம்பிக்கையின் நிழலோ, களவோ அற்றவர். அதுமட்டு மன்று. நடு நிலையுணர்வு கூட அவ் வழி அவர்களில் பெரும் பாலாரை நாடச் செய்யவில்லை. மேலைப் பற்றாட்சி முதன்மையாகவும், வடதிசைப்பற்றாட்சி செறிவாகவும் அந் நடு நிலையைத் தடையிட்டு நிறுத்துகிறது. கிட்டிய சான்றுகளைக் கூட, உலகப் பொது மக்களோ, தமிழரோ, அறியாத வகையில் திரையிட்டுள்ளனர் பலர். ஒரு சாரார் அறிவதை வேறொரு சாரர் அறியாமல் மறைக்கும் தட்டிகள் இட்டுள்ளனர் வேறு சிலர்.

இக் குறைபாடுகள் இன்று பெரிதாகத் தோற்றுவது இயல்பே. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இவை இன்னும் பெரிதாகத்தான் இருந்தன. குறைபாடுகளை அகற்றும் முயற்சியே குறைபாட்டையும் காட்டும், நிறைவை நோக்கியும் நம்மை ஊக்கும். பல இடர்கள், தடைகளுக்கிடையே சென்ற அரை நூற்றாண்டில் பண்டை இலக்கிய ஒளியும், பண்டை வரலாற்றொளியும் சிறிது சிறிதாக ஆய்ந்து பல அறிவுத் தொண்டர்கள் சேகரித்த சேகரத்தின் பயனே நம் இன்றைய அறிவு, இன்றைய குறைபாட்டறிவு! அவ்வனுபவங்களின் விளைவே இச் சிற்றேடு.

போர்களும் அரசர் ஆட்சிகளும், வெளி நாட்டுத் தொடர்புகளும் வரலாற்றின் உயிரல்ல என்பதை மேலை வரலாற்றாசிரியர்கள் சுட்டிச் சுட்டிச் சென்றுள்ளனர். அதன் பயனாகவே இலக்கிய வரலாறு, சமய வரலாறு, அரசியலமைப்பு வரலாறு, பொருளியல் வரலாறு முதலிய வாழ்க்கை நாகரிக வரலாற்றுப் பகுதிகள் உலகில் விளக்க மடைந்து வருகின்றன. ஆனால் நம் தமிழகத்தின் நிலை இவ் வகையில் தலை கீழானது. நமக்குக் கிட்டும் வரலாற்றாதாரம் உலகில்