பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

நாம் எதற்கும் துணிந்து தயாராக இருக்கவேண்டும். அந்த உணர்ச்சி, மனப்பான்மை இருக்க வேண்டும், உலகத்தில் சமாதானத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நமக்குச் சுயபலம் இருந்தால்தான் முடியும்.

காந்தியடிகள் அஹிம்சை என்றார் அல்லவா? பலவீனத்தாலா அப்படிச் சொன்னார்? -பலவீனர்களால் அகிம்சை கடைப்பிடிக்க முடியாது! பலமானவர்களுக்குத் தான் சொன்னார் எனவே, நமக்குத் தைரியம் வேண்டும். நாம் மானத்தோடு வாழவேண்டும். ஆகவே, எந்த நிமிஷத்திலும் நம்முடைய கடமையை நாம் நமது தாய் நாட்டுக்காக - நம் தேசத்துக்காகச் செய்யவேண்டும் என்ற உணர்ச்சி உண்டாக வேண்டும்.

இன்று எங்கே போனாலும், இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு என்ன வேலை ? என்று மக்கள் துடிப்புடன் கேட்கிறார்கள்.

இவ்வளவு நல்ல எண்ணமும் துடிப்பும் எப்போதும் நாட்டில் இருந்ததில்லை. இந்த நல்ல தியாக மனப் பான்மையை நல்ல முறையில் பயன்படுத்தி, நாட்டின் நலனுக்காகக் காரியம் செய்துகொள்வோமேயானால், மகாத்மா காந்தியடிகளுடைய இலட்சியம் நிறைவேறும். சுயமரியாதையுடன், தன்மான உணர்ச்சியுடன் வாழ்வதற்கு உறுதிகொள்வோம். அப்போது உலக அரங்கிலே நமக்கு மரியாதை தானாகவே வரும்!...

“தாழ்வுற்று, வருமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டுக் கிடந்த பாரத தேசந்தன்னை வாழ்விக்க” வந்தார் மகாத்மா காந்தி.

காந்திஜிக்கு வாரிசாக நேருபிரான் இருந்தார்.