பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

மொழிப் பற்றும், மொழியுரிமையும் அந்தந்த நாட்ட வர்களுக்குத் தாய் வீட்டுச் சீர்வரிசைகள் போன்றவை. இவற்றில் மத்திய ஆட்சி குறுக்கிடுவதோ, குறுக்கிட விழைவதோ தவறு. இவ்விதமான தவறுகள் அடியெடுத்து வைக்காமல் இருக்க வேண்டு மென்று தான் மொழிவழித் தேசிய இன அடிப்படையில் மாநிலங் களுக்குச் சுயாட்சி வழங்க வேண்டு மென்று நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றோம்.

தாய்மொழிச் சுதந்திரம் பற்றியும், அதன் அவசியம் குறித்தும் பேசும் பொழுது, “சத்தியம், அஹிம்சையைப் பலி கொடுத்துவிட்டு, அதனால் வரும் சுயராஜ்யத்தை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்ள மாட்டேனோ, அதேபோல, தாய்மொழியை அலட்சியப் படுத்திவிட்டுவரும் எந்தவித ராஜ்யத்தையும் நான் ஏற்க மாட்டேன்,” என்று காந்தியடிகள் குறித்திருப்பதையும் மத்திய ஆட்சியினர் பார்வைக்கு வைக்கவேண்டியது நம் கடமை:

நேருஜி தம்முடைய பொருள் நயம் பொதிந்த பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் ‘உணர்ச்சி ஒற்றுமை’ (emotional-integration) யைப்பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வருகின்றார். வரவேற்கின்றோம். ஆனால் அவர் கனவு காணும் இந்த உணர்ச்சிப் பிணைப்பு பாரத நாட்டு மக்களிடம் , ஏகோபித்த அளவில் பண்பட வேண்டுமென்றால், “பிரிவினைபற்றிப் பேசுவது சட்டப்படி குற்றம்!” என்று பூச்சாண்டி காட்டினால் மட்டும் போதுமா?

மனித மனங்களின் உணர்ச்சிகள் மதிக்கப்பட வேண்டும். பண்பாட்டுச் சுதந்திரமும், தேசிய சுயமரியாதையும் காக்கப்பட்ட வேண்டும். தாய் மொழிப் பாதுகாப்பிற்கு அரசியல் சட்டரீதியான உத்தரவாதம் கொடுக்கப்பட்ட வேண்டியதும் இன்றியமையாததாகும்.