பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தென்னைமரத் தீவினிலே...

தாலும், குழந்தைகளுக்காகத் தான் இப்போது சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்றாள் லட்சுமி அம்மாள்.

“இப்போது நாம் கதிர்காமத்திற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம். வழியில் காலி, களுத்துறை ஆகிய ஊர்களை நாம் கடந்து வந்து விட்டோம். காலியில் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அதுதான் விசேஷம்,” என்றார் கனகசபை.

காடுகள் நிறைந்த வழிகளைக் கடந்து கதிர் காமம் வந்ததும், அனைவரும் இறங்கினார்கள்.

கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

எடுத்து வந்திருந்த கூடையில் ரோஜா மாலை, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சூடம் எல்லாம் இருந்தன.

"கதிர்காம முருகன். திருச்செந்துார் முருகன் மாதிரி மிகவும் அழகாக இருப்பாரா பாட்டி?” என்று பாபு கேட்டான்.

"நீதான் பார்க்கப் போகிறாயே,” என்றாள் லட்சுமி அம்மாள் வேறு எதையும் விளக்காமல்.

கோயிலைச் சுற்றி அழகான மதில் சுவர் எழுப்பி இருந்தார்கள். நுழைவாயில் ஒரு கோட்டையின் முகப்புபோல் இருந்தது. பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டு சன்னதியை அடைந்த போது, அங்கு கண்ட காட்சி பாபுவிற்கு வியப்பை அளித்தது.