பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 105 எனக்கா கலையைப் பற்றித் தெரியாது! சுந்தரி! நீ பேசுவது பாகனேரி அம்பலக்காரருடன் என்பதை மறந்து விடாதே!" "பாகனேரி அம்பலக்காரர் என்ன! பகவானே வந்து என் கலையை மதிக்காமல் நடந்து கொண்டால் அதற்காக இந்த சுந்தரி பணிந்து போக மாட்டாள்!" "வஞ்சிக்கொடியே! நீ வாதிடுவது வாளுக்கு வேலியுடன்! "உமது கையில் மின்னும் வாளைவிட, என் காலில் ஒலிக்கும் சதங்கையை மதிப்பவள் நான்!" "என்ன சொன்னாய்? அகங்காரம் பிடித்தவளே! அவ்வளவு ஆணவமா உனக்கு?" வாளுக்கு வேலியின் கோபாவேசக் கேள்வி, குவலயத்தைக் குலுக்கும் பூகம்ப வெடிப்பாக ஒலித்தது! ஆவேசத்துடன் ஓங்கப்பட்ட அவனது வலிமை வாய்ந்த கை, சுந்தரியின் கன்னத்தில் படுவதற்கு முன்பு, சுறுத்த ஆதப்பனும் செட்டியாரும் அவனுக்குக் குறுக்கே விழுந்து தடுத்துவிட்டனர். வெலவெலத்துப் போய் நின்ற வடிவையும், நாதமுனி, வலிதாங்கி முதலியவர்களையும் இழுத்துக் கொண்டு சுந்தராம்பாள் கனல் பறக்கும் விழிகளோடு அங்கிருந்து அகன்றாள். மான் முட்டி, யானை ஊனமுறுவதுண்டோ? இல்லை ஆனால் வாளுக்குவேலி அப்படி ஊனமுற்ற ஒரு யானையின் நிலையில் அசைந்து அசைந்து நடந்து வண்டியில் ஏறிக் கொண்டான். பாகனேரி போய்ச் சேரும் வரையில் வண்டியில் இருந்த அண்ணனும் தம்பியும் வாய் திறக்கவேயில்லை. தனது மீசையை மட்டும் வாளுக்குவேலி தடவிக் கொண்டே வண்டியில் உட்கார்ந்திருந்தான். 康康