பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் காரணமே இல்லாமல் சில நேரங்களில் பொறாமைத் தீ உள்ளத்தைச் சுட்டுப் பொசுக்கிடும். என்பார்கள் அல்லவா? அந்த நிலைமைதான் போலும் வல்லத்தரையனுக்கு! ஒரு வேளை நீண்ட காலமாகவே பாகனேரி அம்பலக்காரர் குடும்பத்திற்கும் பட்டமங்கலம் அம்பலக்காரர் குடும்பத்திற்கும் பரம்பரைப் பகை முளை விட்டு இப்போது கிளை விட்டிருக்கிறதோ என்னவோ? வெள்ளை அய்யர் கொண்டு வந்த செய்தி பட்ட மங்கலத்து முளைப்பாரித் திருவிழாவையே ஒருவகையில் மூளியாக்கிவிட்டது என்பதை உணர்ந்து வைரமுத்தனும், வீரம்மாளும், உறங்காப்புலியும், வல்லத்தரையனின் முகத்தைப் பார்த்தவாறு மௌனம் கடைப்பிடித்தனர். அந்த அமைதியைக் கலைத்திடும் வண்ணம் குதிரையொன்று வேகமாக வரும் குளம்படிச் சப்தம் கேட்டது. ஒருவரும் மிச்சமின்றி ஒலி வந்த பக்கம் திரும்பினர். வாளுக்கு வேலியின் தம்பி கறுத்த ஆதப்பன், வேகமாக விரைந்து வந்த குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்திப் பட்டமங்கலத்துப் பிள்ளையார் கோயில் வாசலில் இறங்கிக் குதிரையைத் தட்டிக் கொடுத்துவிட்டு, வல்லத்தரையன் குடும்பத்தார் இருக்குமிடம் நோக்கி நடந்து வந்தான்.