பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 கலைஞர் மு. கருணாநிதி ""கோயில் தேருக்குத் தீவைத்த கொடியவர்களே! இதோ உங்கள் கூடாரங்கள் கும்பல் கும்பலாக எரிகின்றன பாரீர்!" என முழக்கமிட்டான். அதற்குள் வைரமுத்தன் படைகள், வாளுக்கு வேலியின் தலைமையில் உள்ள படைகளை நெருங்கி விடவே தீப்பொறி பறக்கும் போர் இருதரப்புப் படைகளுடே ஆரம்பமாயிற்று. இரு நாடுகளுக்கும் உதவியாகப் பல்வேறு கள்ளர் நாடுகளில் இருந்து வந்திருந்த படைகளும் மிக உக்கிரமாகப் போரிட்டன. உறங்காப்புலியின் மூலம் பட்டமங்கலம் படைக்குக் கிடைத்திருந்த ஆங்கிலேயர்களின் போர்த் தளவாடங்களும் பாகனேரிப் படையினரால் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்குப் பயன்படுத்தப் பட்டன. சிறு சிறு வண்டிகளில் வைத்து இழுத்துக் கொண்டு போய்ப் படைவரிசையின்மீதும், கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்திச் சீர்குலைக்கும் பீரங்கிகளைப் பட்டமங்கலத்து வீரர்கள் பாகனேரி வீரர்கள் மீது திருப்பினர். அந்தப் பீரங்கிகளை இயக்குகிறவர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான் கறுத்த ஆதப்பன். தனது படைவீரர்கள் ஆதப்பனால் அழிக்கப்படுவது சுண்ட வைரமுத்தன். தனது புரவியை ஆதப்பன் பக்கம் செலுத்தி அவனை வளைத்துக் கொண்டு போரிட்டான். அதற்குள் ஏழெட்டுப் பீரங்கி வண்டிகள் பாகனேரி மாளிகையை நோக்கி விரைவாகச் செலுத்தப்பட்டன! மாளிகையைத் தரைமட்டமாக்கத்தான் அந்த ஏற்பாடு என்பதைப் புரிந்துகொண்ட வாளுக்குவேலி அந்தப் பீரங்கிப் படையினரைத் தொடர்ந்து விரைந்தான்.