பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கலைஞர் மு. கருணாநிதி சாரட்டு வண்டியில் வாளுக்குவேலியும், ஆதப்பனும் ஏறிக் கொண்டார்கள். ஆதப்பன் குதிரைகளைத் தட்டி விட்டதும் வண்டி காற்றைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது. பாகனேரி அம்பலக்காரர் எதற்காக எங்கே போகிறார் என்று தெரியாவிட்டாலும் திருக்கோட்டியூர் வழியாகச் செல்கிறார் என்ற செய்தி அந்த ஊரெங்கும் பரவிவிட்டது. கோட்டியூர் மக்கள் கும்பல் கும்பலாக வீதிகளில் நின்று வேடிக்கை பார்த்தனர். வீட்டு வாசல்களில் நின்று வாளுக்கு வேலியின் வருகையை எதிர் நோக்கினர். விழாக் காலங்களில் -விவகாரங்களையொட்டி பொதுச் சவுக்கைகளில் நடைபெறும் எல்லா நாட்டு அம்பலக்காரர்களின் கூட்டங்கள் - தேவாலய தரிசனம்- இவைகளைத் தவிர அடிக்கடி வெளியில் வருகிற பழக்கத்தை வாளுக்கு வேலி ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தால் அவனைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் அலை அலையாக ஓடி வருவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் ஆயிற்று! திடீரெனச் செய்தி கிடைத்த காரணத்தால் ஆலயத்து நந்தவனத்து மதிலேறிக் குதித்து மலர்களைப் பறித்து அவன் வரும்போது வண்டியை நோக்கி அந்த மலர்களைத் தூவிட இளைஞர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் திருக்கோட்டியூர் சுந்தராம்பாள் வீட்டில் புதிய நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. சுந்தரியும், வடிவும், கால்களில் சலங்கை கொஞ்சிட மிகுந்த சிரத்தையுடன் ஆடிக் கொண்டிருந்தனர். நாத முனியின் கைத்தாளம் விறு விறுப்பான ஜதி' யுடன் சேர்ந்து ஒலித்துக் கொண் டிருந்தது. லலிதாங்கி இந்த இளம் மான்கள் இரண்டும் துள்ளித் துள்ளி ஆடுவதை அகலமான விழிகளால் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.