________________
பலராமன் வாழ்ந்த காலத்தில் அவன் தலைமை ஏற்ற சாத்துவதர் யமுனைக் கரையில் பல புதிய நீர்வழிகளைக் கண்டு விவசாயப் பயிர் நிலங்களைப் (arable lands of cultivation) பெருக்கினர் என்பதுதான். சனகர், காட்டு வாழ்க்கையில் நிலத்தை கலப்பை கொண்டு உழும்போது நிலத்துக்குள் இருந்து வந்தவள் சீதை என்பது சீதையின் பிறப்பைப் பற்றிய கதை. இதன் பொருள், சீதை உழும் தொழிலையுடைய ஒரு குழுவிலிருந்து பிறந்த தெய்வம் என்பதுதான். கிருஷ்ணன் பலராமன் கூட்டு அக்காலத்தில் யமுனை நதிக்கரையில் தங்கள் எதிரிகளுடன் போராடுவதற்காக கால்நடை வளர்ப்போரும், விவசாயம் செய்வோரும் ஆகிய இரண்டு பிரிவு மக்கள் தம்முள் அமைத்துக் கொண்ட கூட்டையே காட்டுகிறது. கோடரியை ஆயுதமாக உடைய பரசுராமன் தந்தையின் ஆணையின் பேரில் தாயைக் கொன்றான் என்ற கதை இனக்குழு வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் தாய்வழிச் சமூக அமைப்பு, தந்தை வழிச் சமூக அமைப்பாக மாறியபோதுதான் பிறந்திருக்க வேண்டும். (பரசுராமன் ஏந்தியுள்ள கோடரி வேட்டைச் சமூக வாழ்க்கையிலேயே ஒரு ஆயுதமாக இருந்தது. கர்நாடகத்தில் பிரம்மகிரி என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகளில் ஒரு கற்கோடரியும் இருந்தது.) தாய்வழிச் சமூக அமைப்பு தந்தைவழிச் சமூக அமைப்பாக மாறும்போது, வயது வந்த மகன் தந்தையைத்தான் ஏற்றுக் கொள்வான். இக்காலக்கட்டத்தில் குடும்பங்களில் முரண்பாடுகள் தோன்றும். பெண்ணை அடிமையாக்க அதீதமான சில நிலைகளில், நடைமுறைக்கு ஒவ்வாத கற்பு நெறியைப் பெண்ணுக்கு விதிக்கிறான். கற்பு பத்தினித்தன்மை என்பதன் பெயரால் பெண்ணின் ஆண் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.