பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 65 ஏட்டுப்படிப்போடு உலகியல் படிப்பும்-அதாவது அனுபவப் படிப்பும் பெற்றிருந்தாள். இரண்டாண்டுக்கு முன் ஒரு கல்லுக்கோ அல்லது புல்லுக்கோ தன்னை மனைவியாக்கி இருந்தாலும், தன் பெற்றோர் விருப்பத்தைத் தட்டாமல் ஒத்துக் கொண்டிருந்திருப்பாள். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருழ்சன்’ என்பது நம் நாட்டின் தலை எழுத்தாயிற்றே! ஆனால் இப்பொழுது மாப்பிள்ளை தேர்ந்தெடுப்பதில் தன் கருத்தையும் தெரிவிக்கும் அளவுக்கு அன்றில் பட்டறிவு பெற்றிருந்தாள். பட்டணத்தில் படித்தவள் அல்லவா? தந்தையார் திருமணமுயற்சி தொடங்கியதுமே, எனக்கு இப்போது திருமணம் தேவையில்லை. நான் மேலும் படிக்க விரும்புகிறேன், அண்ணன் திருமணத்தை நடத்தி விடுங்கள் என்று அன்றில் சொன்னாள். அதற்கு மாசிலாமணி ஒத்துக் கொள்ள வில்லை. அன்றிலுக்கு மாப்பிள்ளை தேடினார். அவர் நோக்கப்படி மாப்பிள்ளை அமர்வது அரிதாகவே இருந்தது. ஒரு மாப்பிள்ளை மாசிலாமணிக்குப் பிடிக்காமல் போய்விடும். இன்னொரு மாப்பிள்ளை அவர் மனைவிக்குப் பிடிக்காமல் போகும். மற்றொரு மாப்பிள்ளை இளந்திரையனுக்குப் பிடிக்காமல் இருக்கும். வேறொரு மாப்பிள்ளை அன்றிலுக்கு ஆகாமற் போகும். மேலும் ஒரு மாப்பிள்ளை இருவர்க்குப் பிடித்து இருவர்க்குப் பிடிக்காமலும் இருக்கும். மற்றும் ஒரு மாப்பிள்ளை யாருக்குமே பிடிக்காமல் போகும். என் செய்வது! எல்லோருக்கும் பிடிக்கும் மாப்பிள்ளை எங்கிருந்து கிடைக்க முடியும்? பொம்மையா என்ன - நினைத்தபடி செய்து கொள்வதற்கு சிறிது ஏறத்தாழவும் இருக்குந்தான்! தீட்டித் தீட்டிப் பார்த்தால் முடியுமா? எல்லாத் தத்துகளையும் தாண்டிக் கொண்டு ஒரு நல்ல மாப்பிள்ளை வந்தார். அவர் பி.ஏ.,பி.எல். படித்துவிட்டுப்