பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

32

போலவே, சிறந்த வாள் வீரன் என்று பல நாட்களாகப் புகழுடன் விளங்கிய நந்தன் சித்தார்த்தனின் சுழலும் வாளின் வேகங் கண்டு ஆற்றாமல் தோற்றுப் பின்வாங்கிவிட்டான்.

போட்டி விழாவிலே நடைபெற்ற அத்தனை போர்க்கலைகளிலும் வென்று புகழ்வாகை சூடி நின்ற சித்தார்த்தனை அந்த அளவிலே ஒரு மாவீரனாக ஏற்றுக்கொள்ள அங்கு கூடியிருந்த சாக்கிய வீரர்கள் மனம் துணியவில்லை.

கபிலவாஸ்து நகரிலே இருந்த திருக்கோயில் ஒன்றிலே ஒரு பெரிய வில் இருந்தது. அந்தப் பெரிய வில் சித்தார்த்தனின் பாட்டனார் சின்னகானு என்பவருடையது. சின்னகானு பெரிய போர்வீரர். மலையென உயர்ந்த தோளும், அகன்ற மார்பும் பொருந்திய வலியவர். அவருக்குப் பிறகு அந்தப் பெருவில்லை வளைக்கும் திறனுடையார் யாரும் பிறந்ததில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அந்த வில்லை வளைத்து நாணேற்றுபவனே மாவீரன் என்று சாக்கிய வீரர்கள் தீர்மானித்தார்கள். எனவே, போட்டிக்கு வந்த வீர இளைஞர்கள் சின்னகானுவின் பெரிய வில் இருக்கும் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.