பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

42

கொன்று தின்று கொண்டிருந்த காட்சியையும் மேலும் சிறிது தூரம் சென்ற பின்னர் ஒரு புறா ஈக்களைத் தின்று கொண்டிருந்த காட்சியையும் கண்டு சித்தார்த்தன் துயருற்றான்.

சித்தார்த்தனை ஏன் அழைத்துக் கொண்டு வந்தோம் என்றாகிவிட்டது சுத்தோதனருக்கு. அன்றைய நிகழ்ச்சிகளை சித்தார்த்தன் மறந்துவிட அருள் புரிய வேண்டுமென்று அவர் ஆண்டவனை வேண்டிக்கொண்டார்.

சித்தார்த்தன் வெளியே செல்வதற்கென்று நான்கு குதிரை பூட்டிய தேர் ஒன்று இருந்தது. அந்தத் தேரைச் செலுத்தும் பாகன் பெயர் சாணன். தேர்ப்பாகன் சாணன் நல்ல திறமைசாலி மட்டுமல்ல, அனுபவசாலியும்கூட. இளவரசன் கருத்தறிந்து நடக்கக் கூடியவன் என்பதற்காகவே, அவனை சித்தார்த்தனின் தேர்ப்பாகனாக நியமித்திருந்தார் சுத்தோதனர்.

ஒருநாள் சித்தார்த்தன் நான்கு குதிரை பூட்டிய தன் தேரில் ஏறிப் புறப்பட்டான். நகரின் பெரிய வீதிகள் வழியாக அந்தத் தேர் சென்றது. கேளிக்கை மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தத் தேரை சாணன் தான் ஓட்டிக் கொண்டு சென்றான்.