பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

70

படர்ந்து வளர்ந்த அந்தப் பெருங் காட்டிலே அவன் தன்னந்தனியாக இருந்தான். பயங்கரமான காட்டு மிருகங்கள் இரை தேடித் திரியும் பெருங்காடு அது என்பதைச் சிறிது கூட நினைத்துப் பாராமல் அந்தக் காட்டின் மத்தியிலே பட்டினி கிடந்து தவம்புரியத் தொடங்கினான்.

இறைவனைத் தொழுவதும், சமாதியிலிருப்பதுமாக சித்தார்த்தன் அந்தக் காட்டிலே தன் வாழ் நாட்களைக் கழித்தான்.

தான் தேடும் உண்மையைக் காண வேண்டும் என்ற வேட்கையோடு அவன் பல நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடந்தான். ஒரு மண்டலம் இரு மண்டலம் என்று அன்னந்தண்ணீர் எதுவுமின்றிச் சமாதியில் இருப்பான். பிறகு குறிப்பிட்ட நாளெல்லை வந்ததும் சிறிது பசியாறுவான். சில நாட்கள் சென்ற பின் மீண்டும் சமாதி நிலையில் இருப்பான். இவ்வாறு அரைப் பட்டினியும் முழுப் பட்டினியுமாக ஆறு ஆண்டுகள் கழிந்தன. கூனிக் குறுகி மெலிந்து போனான் சித்தார்த்தன். அவன் உடலில் இருந்த வலுவெல்லாம் தொலைந்தது.