பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தோஷமா இருக்குப்பா எஸ். ராஜகுமாரன் சென்னையில் வெய்யிலும் ரசிக்கும்படியாய் இல்லை. மழையும் ரசிக்கும்படியாய் இல்லை. ஆச்சர்யம் மிகுந்த சிறு பிராயத்தில் மழை வருடந்தோறும் ஒரு அழகான அத்யாயம். வெய்யில், வெம்மை தெரியாத பள்ளி விடுமுறைச் சுகம். திருவிழா வேறு கூடுதல் இன்பம் சேர்க்கும். அம்மாவை இழந்து ஒரு வருடம் ஆன நிலையில் அப்பாவின் இந்தக் கவிதைத் தொகுப்பு நூலாக்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்போது இதோ வெய்யில் பிளக்கத் தொடங்கிவிட்டது. "அப்பா! அடுத்த மாசம் எக்ஸாம் முடிஞ்சதும் ஊருக்குப் போகணும்!” என்ற என் மகள் நேசிகா பழைய கோடைக்கால ஊர் ஞாபகங்களைக் கிளறிவிட்டுவிட்டாள். - தளத்தெரு கிராமம், கோடை விடுமுறையும், மாரியம்மன் கோயில் திருவிழாவும், பால்ய நண்பர்களும் நினைவில் வந்து அப்பாவையும் அம்மாவையும் உயிர்ப்பித்தன. கவிதை நூலை பிழை திருத்தும்போது அம்மாவின் வீட்டிலுள்ள அப்பாவின் தெற்கு அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டுவிட்டது மனசு, எழுதப்பட்டு முப்பதாண்டுகள் கழித்து நூல் வடிவம் பெறுகிறது அவருடைய இந்தநூல். எனது நூல்களையெல்லாம் படித்து மகிழ்ந்த அம்மா அப்பாவின் நூல் வெளிவரும் இந்த தருணத்தில் இல்லை...