பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12


வந்த இருவர் வேகமாக முரளி மீது தடுமாறி விழுந்தனர். விழுந்த இருவரும் கனத்த சரீர முடையவர்கள். அவர்கள் இருவரின் உடல் பாரமும் ஒரே சமயத்தில் மடக்கிய கால் எலும்பின் மீதே விழுந்தது. அவன் கால் எலும்பு நொறுங்கவே வலி தாளாமல் முரளி கத்தினான். விழுந்தவர்கள் அதிர்ந்து போய் எழுந்தனர். சேகர் ஓடி வந்து முரளியைத் தூக்கினான். எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டன.

ஆம்புலன்ஸ் வண்டி முரளியை மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தது.

இந்தக் காட்சி சேகரின் மனத்திரையில் படமாக ஓடி மறைந்தது.

***


நீண்ட சிந்தனையிலிருந்த சேகரின் கவனத்தைத் திரும்பியது ஆபரேசன் தியேட்டரிலிருந்து வெளிவந்த டாக்டரின் வருகை. அவரை நோக்கி எல்லோரும் விரைந்தார்கள், கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தவர்களை நோக்கி லேசாக புன்னகை புரிந்தார் டாக்டர். டாக்டரின் அந்தப் புன்முறுவலும் இளநகையும் அங்குள்ளோர்க்குப் பால் வார்த்தது போல் இருந்தது. நம்பிக்கையோடு டாக்டர் கூறப் போகும் வார்த்தைகளைச் செவிமடுத்தனர்.