பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6


அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கால் முறிந்து ஆபரேசன் தியேட்டரில் கிடக்கும் முரளியைப் பார்க்காமல் செல்ல அவன் மனம் இடந்தரவில்லை. எப்படியாவது பார்த்துவிட்டே செல்வது என்ற உறுதியுடன் எழுந்தான். மீண்டும் ஆபரேசன் தியேட்டரை நோக்கி நடந்தான்.

அங்கே கவலை தோய்ந்த முகத்துடன் முரளியின் அப்பா, அம்மா, தங்கை அமலா, பள்ளித் தலைமையாசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் ஒரு சிறு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். தங்கள் கவலையையும் மன ஆதங்கத்தையும் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

சேகர் அவர்களை நெருங்கி நின்ற போதிலும் யாரும் அவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவனுக்கும் தொடர்ந்து அங்கே நிற்க மனமில்லை. சற்று தூரத்தில் கிடந்த பெஞ்சியின் முனையில் சென்று அமர்ந் தான். அப்பெஞ்சியின் மறு முனையில் முரளியின் மாமா அமர்ந்திருந்தார். அங்கிருந்த கும்பலோடு சேராமல் அவர் மட்டும் ஏன் இங்கே தனித்து அமர்ந்திருக்கிறார்? சேகரின் மனதுள் எங்கோ ஒரு மூலையில் இப்படியொரு கேள்வி தலைதூக்கவே செய்தது.