பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி (கற்பனை நாடகம்) (தமிழ் இலக்கியத்தில் நந்திக் கலம்பகம் என்ற ஓர் அருமையான நூல் இருக்கின்றது. இதனைப் பாடிய புலவர் யார், எந்த ஊர், எந்தக் காலத்தில் வாழ்ந்தார் என்ற ஒன்றும் இன்றுவரைத் தெரியவில்லை. ஆனால், மிகச் சிறந்த பாடல்களால் ஆகிய இந்த நூல் அறம் வைத்துப் பாடப் பெற்றுள்ளது என்பது மட்டும் தெரியும். சிவஞான சுவாமிகள் பாடியுள்ள சோமேசர் முதுமொழி வெண்பா என்ற நூலில் உள்ள "நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும்" என்ற இந்த ஒர் அடியை வைத்துக் கொண்டு கற்பனையாக எழுதப்பெற்றது இந் நாடகம். நேரடியாக நடிப்பதற்கு அல்லாமல், வானொலிக்காக எழுதப்பெற்றது ஆதலின் அதற்குரிய சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அறம் பாடுதல் என்பது மிகப் பழங்காலந்தொட்டு இந் நாட்டிலிருந்து வருகின்ற ஒரு மரபாகும். பாடலில் சில சொற்கள் பயின்றுவரக் கூடாது எனப் பெரியோர்கள் கூறியுள்ளார்கள். அதை மீறி, வேண்டுமென்றே இரண்டு பொருள் படும்படியான சொற்களை வைத்துப் பாடுவதே அறம் பாடுதல் என்று கூறப்படும். இவ்வாறு பாடினால், பாடப்பட்டவர்கள் அப்பாடலைக் கேட்டால் உயிர்விட நேரிடும் என்பது பழைய நம்பிக்கையாகும். அதற்கேற்ற முறையில் இந்நூல் தொடங்குகின்ற கடவுள் வாழ்த்திலேயே "மண் + தலமாய்=மண்டலமாய்" என்று தொடங்குகிறது.