பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 197

தசைகள் ஒழுங்காகப் பணியாற்றாத காரணத்தால்தான். மதுகுடித்தவர்களின் கைகள் நடுங்குகின்றன. கால்கள் தடுமாறுகின்றன. தேகமே தடுமாற்றம் அடைகிறது.

3. &am (Medulla oblongata)

மூளையின் கீழ்ப் பகுதியாக அமைந்திருக்கும் முகுளம், மூளையின் பகுதிகளிலே, சிறியதாகவும் இருக்கிறது.

தண்டுவடத்தின் விரிந்த பகுதிபோல முகுளம் அமைந்துள்ளது. அதாவது, இந்த இடத்தில் தான், தண்டுவட மானது மூளையுடன் இணைந்து கொண்டிருக்கிறது.

முகுளத்துடன் தண்டுவடம் தொடர்ச்சியாக இணைந் திருப்பதால், இந்த இரண்டையும் வேறுபடுத்திப் பார்ப்பது அரிதாக உள்ளது. ஆகையால், தண்டு வடத்தின் உச்சிப் பகுதி என்று நாம் முகுளத்தைக் கூறலாம்.

இதிலிருந்து தொடங்குகிற நரம்புகள், இதயம், நுரையீரல்கள், இரைப்பை, குடல் போன்ற முக்கியமான உறுப்புக்களுடன் இணைந்திருக்கின்றன.

முகுளத்தில் சாம்பல், மற்றும் வெள்ளைப் பொருட்கள் உண்டு. வெள்ளைப் பொருளின் உள்ளேயுள்ள சாம்பல் பொருளில், ஏராளமான நூக்ளியஸ்கள் திரண்டு கிடக்கின்றன.

தண்டுவடத்திலிருந்து மூளைக்குச் செல்கிற நரம்புகள், முகுளத்தின் வழியாகச் செல்வதால், அங்கே ஒரு புதிய விளைவு நடைபெறுகிறது. அதாவது, வலது புற மூளைப் பகுதியானது தேகத்தின் இடப்புற செயல்களைக் கட்டுப் படுத்துகிறது. அது போலவே, இடப்புற மூளைப்பகுதி யானது, தேகத்தின் வலப்புற செயல்பாடுகளைக் கட்டுப் படுத்துகிறது.