பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுவது ஆத்திரம் என்று, எவனொருவன் இறுதிவரைத் தன்னுணர்வை இரும் பாக்கிக்கொள்கிறானோ, அவன்தான், இறுதியில் ஆண்மையனாய், ஆற்றலனாய் வாகை சூடுவான்! உன்னையே நீ எண்ணிப் பாரு என்று, எண்ணியவனெல்லாம், ஆரா உவகை பெறுவானே தவிர, தேரா மனிதனாய், என்றும் தேம்பித் தேம்பித் தேங்கி, வாழமாட்டான்! தன்னை உணர்ந்தவன் தரணியை ஆள்வானல்லவா? எனவே அவன் எந்தத் துயர்பாடுகளுக்கும், குறைபாடுகளுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் அஞ்சாமலே புகுந்த துறையிலேயெலாம் முன்னேறுவான். பகையை அன்பாலும், ஆத்திரத்தைப் பொறுமையாலும், அசத்தியத்தைச் சத்தியத்தாலும், இகழைப் புகழாலும் அவன் வெற்றி கொள்வான்! அன்னிபெசண்டும் - காமராஜரும் அயர்லாந்து நாட்டிலே இருந்து வந்த ஒர் அம்மை அன்னிபெசண்ட் அவர்கள், அன்பாலும், அஞ்சாமையாலும் விவேகத்தாலும் தன் வியன்மிகு ஆங்கிலச் செஞ் சொல் உரைகளாலும், இந்தியப் பேரறிஞர் மக்கள் இதயத்தையே ஈர்த்து விட்டார். அவரது தியாசாபிகல் சொசைட்டியின் வெற்றியே அதற்கு ஒர் அடையாளம் அல்லவா? அந்த அம்மையாரின் சுதேசிக் கிளர்ச்சி இயக்கம், சிறுவர் காமராஜை மிகவும் கவர்ந்தது! அதன், அரசியல் நடவடிக்கைகளை ஒர் அதிசயமாகவே கருதிக் கவனித்தபடியே இருந்தார் - காமராஜ்! பாரதியும் - காமராஜூம் இந்த நிலையில், விருது நகர் வீதியிலே ஒரு நாள் கோவில் யானை ஒன்று தனது பாகனுக்கு அடங்காமல், மதமேறித் தனது கால்கட்டை உடைத்துக் கொண்டு பிளிறியபடியே ஒடியது. இதைக் காமராஜ் பார்த்து விட்டார்!