பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 113 அவர் ஈடுபட்டுச் சிறை சென்றார். இப்போது, பெரியார் அவர்களுக்கு வைக்கம் என்ற அந்த ஊரிலே சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் காமராஜ் அவர்கள் திருவனந்தபுரத்திலே உள்ள தனது மாமன் கடையிலே பணியாற்றிக் கொண்டிருந்தார். அதனால் இடையிடையே காமராஜ், வைக்கம் சென்று போராட்டப் பணியாளர்களோடு கலந்து கொண்டு ஆக்க வேலைகளை ஆற்றினார். ஆனால், அவர் கைதாகவில்லை! திருவனந்தபுரம் கடை வாழ்க்கை, காமராஜரின் தேசிய வேட்கையை தணிக்கவில்லை! அவர் எப்போதும் தேசிய எழுச்சியின் அரசியல் சம்பவங்கள் மீதே அக்கறை கொண்டு, அங்கும் - இங்கும் அலைவதைக் கண்ட அவருடைய மாமன், மீண்டும். விருது நகருக்கே அவருக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டார். இந்நிலையில், 1920-ஆம் ஆண்டு காந்தியடிகளின் ஒத்துழையாமைப் போர் ஆரம்பமானது. சேலம் சி. விசயராகவா சாரியார், நாகபுரி மாநாட்டிலே அதைப் பிரகடனப்படுத்தினார். அப்போது கிலாபாத் இயக்கத்தின் முஸ்லிம் மெளல்விகள், காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கையை ஒரு தற்காலிக ஆயுதமாகவே ஏற்போம் என்று அறிவித்தார்கள் அண்ணல் காந்தியடிகளின் கொள்கையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டதால், கிலாபாத் இயக்கமும் இணைந்து - ஒத்துழையாமைப் போரை நடத்தின! காங்கிரஸ் கட்சியில் காமராஜ் பணிகள்! காமராஜ், தனக்கே உரியதான தேசிய உணர்ச்சிப் பெருக்க வீரியத்தோடும் கம்பீரத்தோடும் - காங்கிரஸ் கட்சியின் பணிகளைக் கடமையாகக் கருதிச் செய்து வந்தார். மதுரை மாவட்டத்தைச்சுற்றியுள்ள பல கிராமங்களிலும் மதுரை நகரிலும் அப்போது நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலே அவர் கலந்து கொண்டு பணியாற்றினார். பொதுக்கூட்ட மேடைகளிலே அவர் பேச ஏறும்போது, தெளிவாகவும் - பொங்கிவிழும் உணர்ச்சிகளோடும், அதே நேரத்தில் மக்களுக்கு உணர்ச்சிகள் உந்தியெழுமாறும் - அடக்கமாகவும் பதட்டமற்றவராகவும், அந்த ஊர் மக்களின் கிராமிய மொழிகளிலேயே பேசினார்.