பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தேசியத் தலைவர் காமராஜர்


பேருந்துகள், சுமையுந்துகள் முகப்பெல்லாம் மூவண்ணக் கொடிகள் பரத நாட்டியமாடின. அவற்றிலே ஆண் - பெண் அணிகள் திரண்டன. 'புவனேஸ்வரம் புறப்படும் எமது புறநானூற்று மாவீரர் காமராஜ் வாழ்க! தமிழகத்தின் தன்னிகரற்றத் தலைவர் காமராஜ் வாழ்க!' என்ற முழக்கங்கள் தமிழகமெங்கும் இருந்து வருகின்ற வண்டிகளின் மக்களிடையே எதிரொலித்தன.

புல்லறுக்கும் தீவுத் திடலிலே இரவெலாம் பெய்த பணித் துளிகளாக, மகிழ்ச்சிக் குளிர்ச்சியோடு, தலைவர் காமராஜ் சிலையருகே தொண்டர்கள் குழுமினார்கள் - அவரவர் வாகனங்களோடு எரித்துக் கொண்டிருக்கும் வெயில் வெப்பத்தை, எதிர்க் கட்சிகளின் காழ்ப்புச் சூடாக ஏற்று, தம் பண்பைக் காந்தியத் தட்பமாக்கிக்கொண்ட ஆத்ம திருப்தியோடு அணிவகுத்து வரிசை வரிசையாக அவர்கள் நகரை வலம் வந்தார்கள்!

மண்ணதிரும் முழக்க ஒலிகள்!

முழக்க ஒலிகள், 'பாண்டிய நாடு தந்த தமிழர்தம் தலைமகனே சென்று வா வென்று வா' என்ற ஆவேசச் சுடர்களாக, தொண்டர்கள் மேல் நோக்கியே முன்னேறினார்கள். முகத்துக்கு முன்னே கடந்து போகும் காற்றாகத் தொண்டரணிகள் களிமுழக்கப் போதைகளிலே பின்னணி முன்னணியோடு மோதி, பின்தள்ளி முன்னேறி, வழி நடந்தனர்!

நேர்மையான சொற்களிலே நிமிர்ந்து நிற்கும் வலிமையாக, பின்தள்ளப்பட்ட அணிகள் முன்னேறிய அணிகளோடு போட்டியிட்டு இராணுவ நடை போட்டன. தறி நெய்பவன் நாடாவின் வேகத்தில் கூடச் சிறிது தளர்ச்சி தோன்றலாம்! ஆனால், தலைவர் காமராஜ் தொண்டர்கள், அன்று அந்தத் தளர்ச்சிக்குக் கொஞ்சம் தளர்ச்சியைக் கொடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத் திடலை முற்றுகையிட்டார்கள் மழைக்கால மேகங்கள் தனித் தனியாகவா நகரும்? ஒன்றோடொன்று கூடி, மோதிக் குவியும் அல்லவா? அதனைப் போல. யார் கையில் பார்த்தாலும் காமராஜ் அவர்களின் திருவுருவப் படங்களும், மூவண்ணக் கொடிகளும், வீரமும் பெருமூச்சும் விம்மி விம்மி எழும் நடையலங்காரத் தோற்றங்களும், கோலாகலக் கோலங்களாகக் காட்சி தந்தன!

ஊர்ந்து வந்த ஊர்வலங்கள்!

'தலைவர் காமராஜ், தமிழகத்தை ஆட்சி செய்த ஒன்பதரை ஆண்டு; கால அற்புதங்களின் எதிரொலிகளே இந்த ஊர்வலக் காட்சிகள்' என்று மக்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள்!