பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 237

அவர்களின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தொழிலாளர் பகுதியையே சாரும். இதே தொழிற் சங்கம் மீதுள்ள ஆர்வம், நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து ஆல் போல அதன் கிளைகளும் தொழிலாளத் தோழர்களின் பசுமையான ஆதரவும் தழைத்து, காங்கிரஸ் கட்சிக்கே அந்த வளர்ச்சி ஒரு மாபெரும் திருப்பு முனையாகத் திகழ்ந்தது. காமராஜ் தந்த - விவசாயச் சங்க ஆதரவு! தொழிலாளர்களின் எந்தப் பிரச்னையானாலும் சரி, தமிழ்நாடு காங்கிரஸ் என்ற முறையில், காமராஜர் அவற்றை உடனடியாகத் தீர்த்து வைப்பார்; அவற்றை சுமுகமாகவும் முடித்து வைப்பார்: கோவை மாநகரில் அப்போது முப்பதாயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து அரசுக்கு ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கி விட்டார்கள். அந்த இக்கட்டானதோர் இடர்ப்பாட்டை நீக்க திரு காமராஜ் அவர்களும், திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களும் கோவை நகருக்குச் சென்று, நூற்பாலைகள் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, சென்னை திரும்பினார்கள். அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த திரு. ஓமந்துர் இராமசாமி ரெட்டியார் அவர்களுடன் பேசி, விவாதித்து, அந்த அரசியல் நெருக்கடியை சமரசமாக முடித்ததால், “காமராஜர் தொழிலாளர்களின் பாதுகாவலர்' என்ற பாராட்டையும் நம்பிக்கையையும் தொழிலாளர் உலகில் பெற்றார். சென்னை பக்கிங்ஹாம் அண்டு கர்நாடிக் நூற் பாலையைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் எல்லாம், நெருக்கடி நேரும்போது திரு. காமராஜ் அவர்களையே அணுகி, தக்க ஆலோசனைகளைப் பெறுவார்கள். மதுரை நகரிலே உள்ள ஹார்வி நூற்பாலைத் தொழிலாளர்கள் திரு. காமராஜர் அவர்களைத் தங்களது தொழிற் சங்கத்திற்குரிய தலைவராக்கிட விரும்பினார்கள். திரு. காமராஜரை அணுகி, அவரது பெயரைப் பயன்படுத்தச் சம்மதம் கேட்டார்கள். பிற செயற்பாடுகளைத் தாங்களே கவனித்துக் கொள்வதாகக் கூறிடப் பன்முறை காமராஜரிடம் படையெடுத்தார்கள்.