பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராஜரால் வெற்றி! காந்தி பிரான் மறைந்ததற்குப்பிறகு, ஜெய்ப்பூர் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தல் 1948-ஆம் ஆண்டு இறுதியில் நடத்த ஏற்பாடானது. ஆண்டாண்டு தோறும் நடைபெற்றிடும் ஒவ்வொரு அகில இந்திய காங்கிரஸ் மகா சபைப் பேரவையிலும், காந்தியடிகள் காங்கிரஸ் கட்சி மேடையிலே அமர்ந்து கலந்துகொள்ளும் காட்சி, அப்போது இல்லாமல் போய்விட்டது. கனிவான தமது அறிவுரைகளை - அஹிம்சா நெறியுரைகளை அரசியல் போராட்ட ஒழுக்கவுரைகளை - நமக்கெலாம் கூறி அறிவூட்டிப் பழக்கப்பட்ட வார்தா மாதவர் அண்ணல் காந்தி, இந்தத் தேர்தலிலே இல்லை என்கிற கவலையுணர்வோடு காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம், மகாசபைத் தலைவர் தேர்வுத் தேர்தலிலே ஈடுபடலானார்கள்! கவலையும் வருத்தமும், காங்கிரஸ்கட்சித்தலைவர்களிடையே காணப்பட்டாலும், தலைவர் தேர்தலை அமைதியான முறையிலே - சுமுகமானசூழ்நிலையிலே ஒற்றுமையாக நடத்த முடியாமலே, கடும் போட்டிகளோடு தேர்தல்பணியிலே சுழன்றார்கள் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபையினால், காங்கிரஸ் கட்சியினுடைய வரலாற்றாசிரியர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டவர் திரு பட்டாபி சீதாராமையாஎன்பவர் அவரை, ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி மகாசபையின் மாநாட்டுத் தலைவராகத் தேர்வு புரிய பிரதமர் நேரு, தலைவர் காமராஜ் போன்றவர்கள் விரும்பினார்கள்! பட்டாபி சீதாராமையாவை எதிர்த்து, அதே காங்கிரஸ் மகாசபை சார்பாகப் புருஷோத்தம தாஸ் தாண்டனை நிறுத்திட, சர்தார் வல்லபாய் படேலைப் போன்றவர்கள் திட்டமிட்டுப் பணியாற்றினார்கள்.