பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுக்கு எட்டியவரை ஆவடி மாநாடுதான் மாநாடு! 1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள், சென்னை மாநகருக்கு ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆவடியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இந்தியத் தேசியக் காங்கிரஸ் 60ஆவது மாநாடு யு.என். தேபர் தலைமையில் இங்கே நடைபெற்றது. ஆவடியில் 60ஆவது காங்கிரஸ் மாநாடு! மாநாட்டின் எல்லா பொறுப்புக்களையும் முதலமைச்சர் காமராஜ் அவர்களே ஏற்றிருந்தார். டி. வி. எஸ். தொழில் நிர்வாகத்தைச் சேர்ந்த டி.எஸ். கிருஷ்ணா, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்" நிறுவன உரிமையாளர் இராம் நாத் கோயங்கா, தஞ்சை மாவட்ட மிராசுதார் வி.எஸ். தியாகராஜ முதலியார் ஆகிய மூவர் குழுவைத் தலைவர் காமராஜ் அமைத்து, அவர்களிடம் மாநாடு நடத்தும் பொறுப்புகளை ஒப்படைத்தார். ஜெமினி வாசன் அரும்பணி! ஜெமினி ஸ்டுடியோ உரிமையாளரான எஸ். எஸ். வாசன், ஆவடி மாநாட்டின் அலங்காரப் பொறுப்புக்களைத் தலைவர் காமராஜரிடமிருந்து ஏற்றார்; 'ஆவடி மாநாட்டின் அலங்காரத்தைப் பார்த்தவர்கள், இதுவரை காணாத முறையில் மாநாடு அமைந்திருக்கிறது' என்று சொல்வது முக்கியமல்ல; இன்னும் 25ஆண்டுகள் கழித்தும் இதுபோன்ற மாநாட்டு அழகைப் பார்க்கவில்லை என்று கூறுமாறு இருக்கவேண்டும் ' என்று எஸ்.எஸ். வாசன் அவர்களிடம் தலைவர் காமராஜ் கூறினார். மாநாடு நடைபெற்ற இடத்திற்கு முதலமைச்சர் காமராஜ் அவர்கள், தனது அரசியல் ஆசான் நினைவாக சத்தியமூர்த்தி நகர் என்று பெயர் சூட்டினார். ஆவடி மாநாட்டைப் பார்க்கத் தலைவர் அவர்களின் அருமை அன்னையார் சிவகாமி அம்மையார், விருது நகரிலே இருந்து சத்தியமூர்த்தி நகருக்கு வந்தார்.