பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 3.71 தலைவர் காமராஜ் அவர்கள் குடியிருந்த வீட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என்று அவர் நண்பர்கள் கூறும்போது, 'எனக்கு எதற்கு வீடு? பொண்டாட்டியா? பிள்ளையா? என்று அவர்மறுத்து விட்டார். நவசக்தி' என்ற நாளேடு டிரஸ்டில் அதை வாங்கிவிடலாம் என்று தலைவருடைய நண்பர்கள் அவரிடம் கூறினார்கள். முருக தனுஷ்கோடி, ஜி. கே. மூப்பனார், எம்.பி. தாமோதரன், என். இராமசாமி உடையார் எல்லாம் சேர்ந்து அந்த வீட்டைச் சொந்தமாக அவர் பெயருக்கு வாங்கி விடலாம் என்று முன் வந்தார்கள். 'எனக்கு வீடு வேண்டாம்' என்று அவர் மறுத்து விட்டார். தலைவர் குடியிருந்த அந்த வீடு, ஒரு வடநாட்டுக்காரரிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. அதன்விலை அப்போதைய மதிப்புப்படி மூன்று லட்சம் ரூபாய் மதிப்புடையது. அந்த வீட்டின் உரிமையாளர் அப்போது அமெரிக்காவிலே இருந்ததால், கடைசிவரை அந்த வீட்டை வாங்க முடியாமல் போய்விட்டது. இறுதியில், கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்தபோது, விருது நகர் வீட்டைத் தலைவர் காமராஜரின் நினைவாலயமாக்கினார். அதற்குப் பிறகு மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள்முதல்வரான பின்புதான், சென்னையில் காமராஜ் அவர்கள் வாழ்ந்த திருமலைப் பிள்ளை சாலை இல்லத்தை நினைவாலயமாக்கினார். ஒரு முறை தலைவர் அவர்களைப் பார்த்துப் பேசியவர்களே, மறுமுறை வந்தால், அவர்களைச் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளும் நினைவாற்றல் காமராஜருக்கு அதிகமாக இருந்தது. பொதுக் கூட்டங்களுக்கு பேசச் செல்லும்போது கையில் குறிப்புகள் ஏதும் எடுத்துச் செல்வதில்லை. நினைவில் தேங்கி இருக்கும் கருத்துக்களையே அவர் நிதானமாக, சிந்தித்துப் பேசும் பழக்கம் உடையவர். காமராஜ் அவர்கள், தனது வருவாயின் சக்திக்கேற்ப நண்பர்களுக்கும் ஏழை மக்களுக்கும் வறுமைச் சூழலில் வருந்துபவர்களுக்கும் உதவி செய்வார். தமிழக அரசு மூலம் உதவிபெற வருபவர்கள், அந்த உதவிகள் நியாயத்திற்கும் - மனச்சாட்சிக்கும் - பிறர் குறைகாணாத எண்ணங்கட்கும் உட்பட்டவையாக இருந்தால், உடனே நடவடிக்கை எடுத்து உதவி செய்திட அரசுக்கு ஆணையிடுவார் தலைவர் காமாராஜ்.