பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 387 உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள' என்ற திருக்குறளின் அருமை உணர்வுகளுக்கேற்பத் தனது அன்பிற்கினிய மனம் கவர் மனைவி யசோதராவை மறந்தார் மழலைச் செல்வமாகத் தவழ்ந்து கொண்டிருந்த தனது செல்வன் ராகுலன் பாசத்தையும் வெறுத்தார்: சுருக்கமாக உரைப்பதென்றால், உலகப் பற்றுக்களை எல்லாம் உதறித் தள்ளி, காடுமேடு, காய் கனி, மேடு பள்ளம், புற்று புதர், புல்பூண்டு, கற்கள் மணல் மேடுகள், மரத்தடிகள் - மைதான வெளிகள் தான் தனக்குச் சொந்தமென அவர் அலைந்து அலைந்து திரிந்தார் போதி மாதவனாகி, ஞானபோதகனாக நடமாடியதால், அவர் உலக மக்கள் மனதிலே ஞான ஒளிசிதறும் சிற்பக் கல்வெட்டாக நிலைத்து நின்றார் தனது கொள்கை நாட்டிற்கும் உலகுக்கும் நன்மை பயக்க வேண்டுமானால், தன்னையே தியாகம் செய்தால்தான், அந்த மக்கள் தத்தமது மனப்பேழைகளிலே தியாகிகளின் திருப்பெயரை, திருஉருவை, திருநெறிகளை ஒவியங்களாகப் பொறித்து வைத்துக் கொள்வார்கள் என்ற பெளத்த நிலவின் சீதளச் சிந்தனையை; தலைவர் காமராஜர் அப்படியே தனது சிந்தனையில் பதித்துக் கொண்டார்! அந்த அறிவு ஆசானின் எதிரொலியைத்தான்தலைவர்காமராஜர் தனது சிந்தனைக்குரிய வைரமுடியாக ஏற்றார். அந்தச் சிந்தனையே அவரை இரவும் பகலும் எங்கோ விரட்டிக்கொண்டிருந்தது! அந்த எண்ணச் சுழல்களின் ஒரு பொறிதான், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மூத்த காங்கிரஸ்காரர்கள் எல்லாம் தம் பதவியைத் துறந்து, அவரவர் அதிகார ஆசனங்களைத் தூக்கி எறிந்து வெளியேறி, காங்கிரஸ் பேரியக்கப் பணிகளுக்காகத் தம்மை, தம் சுகபோக வாழ்வுகளைப் புத்தரைப் போலத் துறந்து, நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்தல் வேண்டும்; அதுவே அரசியல் நல்லறம் என்றுகூறித் தாமும் அந்த உறுதியைப் பூண்டார். சுபாஷ் பாபு இலக்கணம்: அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரியக்கத்தில், இந்த நிலை எதிர்காலத்தில் இயங்கியே தீரும் என்பதனை, இந்தியா சுதந்திரம் பெறாததற்கு முன்பேயே சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் எதிரொலித்தார்: