பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 405 வெந்து நொந்து வாழ்ந்தவர். பாஞ்சால சிங்கம் என்று பாரத மக்களால் போற்றிப் புகழப்பட்ட லாலா லஜபதிராய் அவர்களால், காசிமா நகரிலே ஆரம்பிக்கப்பட்ட மக்கள் ஊழியர் சங்கத்திலே அறுபது ரூபாய் சம்பளத்திற்கு உறுப்பினரானவர் லால்பகதூர் சாஸ்திரி! பெருந்தலைவர் காமராஜ் சாதாரண ஊழியராகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, படிப்படியாகத் தனது உண்மையான உழைப்பாலும், தியாகத்தாலும், ஒழுக்கத்தாலும், தேசிய உணர்ச்சியாலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக, முதலமைச்சராக, அகில இந்திய காங்கிரஸ் கட்சிப் பெருந்தலைவராக முன்னேறியதைப் போலவே, லால் பகதூர் சாஸ்திரியும் படிப்படியாக உழைப்பால் உயர்ந்து இறுதியாக அவர் உறுப்பினராகச் சேர்ந்த காசி மக்கள் ஊழியர் சங்கத்திற்கே தலைவரானார். சுதந்திரப் போராட்டக் காலங்களிலே மாறுவேடங்கள் அணிந்து, ரைனா என்ற ரயில் நிலையத்திலே இறங்கித் தலைமறைவு வாழ்வு நடத்தியவர் - காமராஜரைப் போலவே காங்கிரஸ் கட்சிப் போராட்ட வீரர்களின்சுற்றறிக்கைகளோடு இரவு பகலாக அலைந்து, காங்கிரஸ் வீரர்களுக்குப் போராட்ட வியூகங்களை வகுத்துக் கொடுத்து, ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளித்தவர் சாஸ்திரி! சாஸ்திரி அவர்களின் போராட்டப் பணிகள் முடிந்தவுடன் பகிரங்கமாகப் போலீசாரிடம் தம்மை ஒப்படைத்துக் கைதாகி, பிறகு பலமுறைகள் மீண்டும் மீண்டும் சிறையேறி, வெளிவந்து உத்தரப் பிரதேசக் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவரானாவர் - காமராஜரைப் போலவே! உத்தரப்பிரதேசக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிலே அவரும் ஒருவராகி, நாடாளுமன்றக் காங்கிரஸ் குழுவுக்கும் அவர் தலைவரானவர். பண்டித கோவிந்த வல்லப பந்த் அவர்கள் தலைமையிலமைந்த உ.பி. அமைச்சரவையில் காவல்துறை, போக்குவரத்துத் துறைகளுக்கு அவர்அமைச்சரானார்: காங்கிரஸ் கட்சித் தொண்டு ஒன்றே பெரிதென நம்பி மீண்டும் நேருவுடன் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்குச் செயலாளர் ஆனவர் சாஸ்திரி பிரதமர் நேரு அவர்கள் அமைச்சரவையிலே 1952-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகி, இரயில்வே அமைச்சரானவர் - லால்பகதுர் அவர்கள்.