பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தேசீய இலக்கியம் புலவர்களின் கற்பனை போன்றது அன்று இது. உணர்வு உள்ளத்தில் அநுபவங்களை உண்டாக்கும் சக்தி வாய்ந்ததாக அது இருத்தல்வேண்டும். அப்பொழுதுதான் கண்ணப்பர் அன்பையும், சிறுத்தொண்டர் அன்பையும், இயற்பகை அன்பையும் கற்பனை செய்து காணக்கூடும். இவ்வளவும் செய்யும் அக் கற்பனை, பக்திநெறிக்குத் துணை செய்வதாக இருத்தல்வேண்டும். இங்ஙனமே சேக்கிழார் அதனைப் பெற்றிருந்தார் என்று கூறல் மிகையாகாது. சேக்கிழாருடைய காப்பியத் தி ல் காணப்பெறும் அருமைப்பாடே நம் போன்றோர் அதனை அநுபவிப்பதற்கு இடையூறாக நிற்கிறது. ஏனைய காப்பியங்களில் உள்ள ஏனைய சுவைகளை நாம் அனுபவிக்கிறோம். இயல்பாகவே சுவையுடைய அப் பகுதிகள் நம்மிடம் ஏற்கெனவே உள்ள அச் சுவைகளைக் கிளறிவிடுகின்றன; நம் மனத்தில் உள்ள சுவை, கவிதைதரும் சுவையை அதிகப்படுத்தி அநுபவிக்கச் செய்கிறது. நம்மிடம் அச்சுவை ஓரளவாவது முன்னரே இல்லையாயின் கவிதை தரும் சுவையை அநுபவித்தல் இயலாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகைக் கவிதை மிகுதியும் பிடிப்பதற்கும், ஒவ்வொரு வகைக் கவிதை வெறுப்பைத் தருவதற்கும் இதுவே காரணம். காதற்சுவை உணராத இளஞ் சிறுவருக்கு அகப்பாடல் எவ்விதச் சுவையும் ஊட்டாது நிற்றல் கண்கூடு. இதனால் அகநானூற்றின்மேல் இழுக்குக் கூறல் தவறு அன்றோ? பெரும்பாலும் ஒவ்வொருவ ரிடத்தும் ஒன்பது வகைச் சுவைகளும் இயல்பாக அமைந் திருத்தலின், இளக்கியம் தரும் இப் பகுதிகளை அநுபவிக்க முடிகிறது. இவற்றில் ஒன்றிரண்டு குறைந்து இருத்தலும் உண்டு. ஆனால், மிகப் பெரும்பாலோரிடம் பக்தியாகிய சுவையைக் காணுதல் அரிது அன்றோ? ஆதலின் அதையே மிகுதியாகக்கொண்டு எழும் ஒரு காப்பியத்தைப் பெரும் பாலான மக்கள் அநுபவிக்க இயலாது. பக்தியோடு கலந்த சிறந்த கற்பனைத்திறம் இருத்தலால் சிறந்த காட்சிகளை மனக்கண்முன் காண்கிறார் சேக்கிழார்.