பக்கம்:தேடி வந்த குயில்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

தேடிவந்த குயில்


அவரோடு சமமாக உரையாடும் ஆற்றலோ தகுதியோ எனக்கு அப்போது இல்லை. நான் ஒரு பள்ளி மாணவன். இலக்கியவாதியல்ல. ஒருநாள் நான் எழுதிய பாடல் ஒன்றைப் பயந்து பயந்து அவரிடம் நீட்டினேன். ஐயா, நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே என்ன சொல்வாரோ என்ற குழப்பத் துடன் தாளை நீட்டினேன். வாங்கிப் பார்த்தார். பாடிப் பார்த்தார். பிறகு என்னை நோக்கினார். 'நன்றாய் இருக்கிறது. ஆனால் நீ இலக்கணம் படிக்க வேண்டும். யாப்பிலக்கணம் படித்த பிறகுதான் கவிதை எழுத வேண்டும். எழுதும் கவிதை பிழையில்லாமல் இருக்க வேண்டும்’ என்றார். 'ஐயா, இதில் பிழை இருக்கிறதா?’ என்று கேட்டேன். “ஆம்” என்று மூன்று பிழைகளைச் சுட்டிக் காட்டினார். அவற்றைத் திருத்தியும் காட்டினார். ஆர்வத்தால் கவிதை எழுத முனைவோர், பிழையில்லாத நல்ல இலக்கியங்கள் படைக்க வேண்டும் என்பதிலே குறியாக இருந்தார் புரட்சிக் கவிஞர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தொடக்க காலத்தில் தனித்தமிழில் எழுதவில்லை. பாரதிதாசன் பாடல்கள் முதல் தொகுதியைப் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும். பிறமொழிச் சொற்கள் பல விரவிய பாடல்களையே அதில் பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால். தனித் தமிழில் எழுதப் புகுவோரைக் கிண்டல் செய்தும் இருக்கிறார்.