பக்கம்:தேடி வந்த குயில்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

புகழ்பெற்ற பெரியவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தவர்கள் பெருமைக் குரியவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்ததை அறிகின்ற மக்கள், அப்படியா என்று வியப்புடன் நோக்குவார்கள்.

அந்தப் பெரிய மனிதரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்று எண்ணிக் கொண்டு, வாய்ப்புக் கிடைத்தவர்கள் நல்ல பேறு பெற்றவர்கள் என்று போற்றுவார்கள்.

என் நண்பர் ஒருவர் ஒரு நாள் எங்களிடையே பேசிக் கொண்டிருக்கும்போது "எனக்கு மகாத்மா காந்தியை நன்றாகத் தெரியும்" என்றார், உடனே நாங்கள், "அப்படியா? அவருடைய சத்தியாக்கிரகப் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்களா? சிறையில் அவரோடு இருக்கும் வாய்ப்புக் கிடைத்ததா? போலீஸ் தடியடிக்கு ஆட்பட்டதுண் டா?” என்றெல்லாம் ஆவலோடு கேட்டோம்.

"நான் என்ன சொன்னேன்? எனக்கு மகாத்மா காந்தியை நன்றாகத் தெரியும் என்று தானே சொன்னேன். அவர் பேசிய கூட்டங்களுக்குப் பல முறை சென்றிருக்கிறேன், அவருடைய வரலாற்றை நன்றாகப் படித்திருக்கிறேன். அதனால் அவரைப்பற்றி எனக்கு நன்றாக - மிக நன்றாகத் தெரியும் ஆனால் அவருக்கு என்னைப்பற்றித் தெரியாது” என்றார்.

வேடிக்கைக்காக அவர் இப்படிச் சொல்லியிருந்தாலும், பெரியவர்களைப்பற்றி அறிந்திருப்பதே பெருமைதான்.