பக்கம்:தேடி வந்த குயில்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பரம்பரை முருகு சுப்பிரமணியன் அவர்கள் பொன்னி இதழ் தொடங்கும்போதே, பொன்னி இதழை எவ்வாறு நடத்த வேண்டும் என்று ஒரு வடிவமைப்பை வைத்துக் கொண்டார். பொன்னி ஒரு பொதுநிலை இதழாக இருக்க வேண்டும் என்பதோடு, தமிழ் மக்கள், தமிழ் நாடு, தமிழ் மொழி சார்ந்த பெருமக்களையும். மன்றங்களையும், அமைப்புகளையும் நாடு முழுவதும் பரவி வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்று கொள்கை வகுத்துக் கொண்டார். மக்களிடையே விழிப்பை ஏற்படுத்தி, விடுதலை யுணர்வைத் தட்டி எழுப்புகின்ற நல்ல தலைவர்களான பெரியார், அண்ணா, புரட்சிக் கவிஞர் என்ற முப்பெருந் தலைவர்களை - அவர்களின் தொண்டை - அவர்களின் பெருமையை மக்களிடையே தொடர்ந்து பரப்புகின்ற பணியைப் பொன்னி செய்து வந்தது. மற்ற பிரபல இதழ்களெல்லாம் தீபாவளி இதழ் வெளியிட்ட காலத்தில், தீபாவளி தமிழர் விழாவல்ல; பொங்கல்தான் தமிழர் திருநாள் என்ற கருத்தைப் பரப்பு வதற்காக பொன்னி பொங்கல் மலர்களை வெளியிட்டது. நல்ல வழவழப்பான விலை உயர்ந்த தாளில், பெரிய அளவில் பொன்னி வெளியிட்ட பொங்கல் மலர்கள் நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றின.