பக்கம்:தேன் சிட்டு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு வழி

51



அவருடைய உபதேசத்தைக் கடைப்பிடிக்காவிடில் இன்றைய நிலைமையில் மானிட சாதிக்கு உய்வே கிடையாது. எச். ஜி. வெல்ஸ் கூறிச் சென்றது போல மனித இனமே மறைந்துபோகும்படி நேரிடும். ஆதலால் இதை ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

விலங்கு நிலையிலிருந்து பரிணாமக்கிரமத்திலே மனிதன் தோன்றியிருக்கிறான். அவனுடைய மூளை வளர்ச்சி பெற்றிருக்கிறது; அவனுடைய மனமும் வளர்ச்சி பெற்று நுட்பமடைந்திருக்கிறது. ஆனால் அவனுடைய விலங்குணர்ச்சிகள் இன்னும் மறைந்து விடவில்லை. மனிதன் தானடைந்துள்ள முன்னேற்றத்திற்கு அறிகுறியாகத் தனது அறிவுத் திறமைகளை மட்டும் எடுத்துக்காட்டுவது போதாது. அன்பு, இரக்கம், கருணை போன்ற அவனுடைய மென்மை உணர்ச்சிகள் எவ்வளவு தூரம் ஓங்கி வளர்ந்திருக்கின்றன என்பதை அவன் எண்ணிப் பார்க்க வேண்டும். அவைகள் ஒங்குவதே உண்மையில் அவனுடைய முன்னேற்றத்திற்கு அறிகுறியாகும்.

அணுகுண்டு முன்னேற்றத்தின் சின்னமல்ல; அது அழிவின் சின்னம்; அது மானிட சாதியின் யமன். அன்பே முன்னேற்றத்தின் சின்னம். அன்பு பெருக இன்பம் பெருகும். அன்பு பெருக மானிட சாதி சுவர்க்க இன்பத்தை உலகில் நிலைநாட்டும், அன்பே உலக அமைதிக்கும் மக்கட்கூட்டத்தின் இன்பத்திற்கும் வழியாகும். அதை விட்டால் வேறு வழி கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/52&oldid=1149625" இலிருந்து மீள்விக்கப்பட்டது