பக்கம்:தேவநேயம் 1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் நிகழ்நிலை இயல் 18 பக்கங்களையுடையது. திருநான்மறை ஆராய்ச்சி, தமிழ்நாட்டுச் சிவமடங்கள், சைவ சித்தாந்த மகாசமரசத் தொண்டு, காஞ்சிக் காமக்கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரைகடந்த தமிழ் வெறுப்பு, அகோபிலம் சீயர் ஆணவம், தவத்திருக் குன்றக்குடி அடிகளின் சிவ தமிழ்த்தொண்டு, தி.மு.க. அரசின் திருக்கோயில் தொண்டு என்பவை இதில் அடங்கியுள. வருநிலையியல் ஏழே பக்கங்களில் நிறைகின்றது (139-145). இதில், திருக்கோயில் தமிழ்வழிபாடு, பல்வகுப்புக் கோயில் பூசகர், வழிபாட்டில் வீண்செலவு நிறுத்தம், உருவிலா வழிபாடு, இந்துமதம் என்னாது தென்மதம் என்னல், எல்லாமதமும் தனித்தமிழ் போற்றல், தவத்திருக் குன்றக்குடி அடிகள் கடமை என்பன ஆராயப்படுகின்றன. முடிபுரை இயல் பதின் உட்பிரிவுகளையுடையது. எது தேவமொழி, பிராமணன் நிலத்தேவனா, பிராமணனுக்கு உரியது எவ்வறம்? சிவ மதமும் திருமால் மதமும் தமிழ மதங்களே. தமிழ ஆரிய மத வேறுபாடு, கொண்முடிபுக் குறியீடுகள், மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக் கட்டையா? கடவுள் உண்டா? மதத்தை அழிக்க முடியுமா? நம்பா மதமும் ஒரு மதமே என்பவை அவை. இவற்றுள் ஆறு உட்பிரிவுத் தலைப்புகள் வினாக்களாய் அமைவன. அவற்றுக்குத் தக்க விடைகளைத் திறமாகத் தருகிறார் தேவநேயர். தமிழே தேவமொழி; பிராமணன் நிலத்தேவன் அல்லன்; பிராமணனுக்கு நாடும் பேச்சு மொழியும் போன்றே அற வாழ்க்கை யும் இல்லை; மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை இல்லை; நம்பா மதத்தினரும் தம்பு மதத்தைக் கடைப்பிடிப்பதே சாலச் சிறந்தது; மனம் உள்ளவரை மதத்தை ஒருவராலும் அழிக்க முடியாது என்பவை பாவாணர் தரும் விடைகள். வழக்கம்போல ஆங்காங்குச் சொல்லாய்வு வேர் விளக்கம் காட்டும் பாவாணர் பேரா.உ.வே.சாமிநாதையர் குறுந்தொகை நூலாராய்ச்சியில் 44 சொற்களை வடசொற்கள் எனக்காட்டி 'முதலியன' என்கிறார். இவற்றுள் 37 சொற்கள் தென் சொற்கள் என்று விளக்குகிறார் (154) 'பணிலம்' என்பது வடமொழி அகரமுதலியிலும் இடம் பெறாத சொல்; தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொல்லெனக் காட்டும் பல்கலைக் கழக அகரமுதலியிலும் வடசொல்லெனக் காட்டப்படாத சொல் எனச் சுட்டுகிறார் பாவாணர். "மதங்களெல்லாம்” தேவியம் (அ) உள்ளியம் (ஆஸ்திகம்) தேவிலியம் (அ) இல்லியம் (நாஸ்திகம்) என இருவகைப்பட்டிருப்ப தால் மதவியல் வாயிலாக மக்களை ஒன்றுபடுத்தல் இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/68&oldid=1431385" இலிருந்து மீள்விக்கப்பட்டது