பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தேவார ஒளிநெறிக் கட்டுரை


கொண்டு தேடும் அடியார் சித்தத்திருப்பவர். நிதியே, மணியே, சிவனே என்பார்தம் சிந்தையினர்; குற்றமற்றவர்தம் மனத்திலிருப்பவர்; தம்மைத் தியானிப்பவர் தம் மனத்தில் உலாவி நிற்பவர். மறை, அங்கம் வல்லாரிடம் இருப்பவர்; பேய்சூழ் சுடலையை வாசஸ்தலமாகக் கொண்டுள்ளவர்; பேயுடன் குடிவாழ்க்கை கொண்டுள்ளவர். தேவியின் மார்பகத் துறைபவர், அண்ணாமலை ஆகிய தலங்களையும் தம்மை நாடோறும் ஏத்தும் ஊர்களையும் தமது இடமாகக் கொண்டுள்ளவர்; வெள்ளை எருத்தின் மிசை இருப்பவர்; கல்லால் நீழலில் இருப்பார்; தாமரை மலரிலிருப்பார்; கடலுளார், காட்டுளார், நாட்டுளார், கழியுளார், வழியுளார், மலையுளார், மண்ணுளார், நீருளார், தீயுளார், காற்றுளார், விண்ணுளார்.

44. சிவபிரானது ஊர்தி [206]

சிவபிரானது வாகனம் பசுவும், விடையும். இடபம், எருது, ஏறு, சே, புல்லம், பெற்றம், பெற்று என்பன விடையைக் குறிப்பன. தேர். யானை, குதிரை இவை ஒன்றிலும் ஏறாமல் எருதொன்றையே என்றும் எம் பெருமான் ஏறுவர். ஏறொன்றே அவருக்கு உகந்த வாகனம். அவர் உத்தம பசுவின்மேல் ஏறுவதால் “பசுபதி யதன் மிசைவரு பசுபதி” எனப் பாராட்டப் பட்டார். சிவபிரான் ஏறும் ஏறு - அழகியது, கடியது, தூயது, பெரியது, வலியது, இணையில்லாதது, கொம்புடையது, சினமிக்கது, செண்டாடுவது, செங்கண்ணது, தறுகண்ணது, புகருடையது, பைங்கண்ணது, வெங்கண்ணது, பொலிவுடையது, போர்க்குற்றது, மாசில்லாதது, வீரங்கொண்டது, விளையாடுவது, வெண்ணிறத்தது, ஆடல்புரியவல்லது, இடிபோன்ற குரலை உடையது, இளமை கொண்டது, கடுநடையது, தொலையாப் பீடுடையது, மணி - அரசிலை. மாலை இவைதமை அணிந்துள்ளது, வெள்ளி மலைபோன்றது, வேகமாய்ப் பாயவல்லது.