பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தேவார ஒளிநெறிக் கட்டுரை

வாயிடையும் அகலாதிருப்பர். திருநீறு பூசும் அடியாரிடம் இருப்பர். போற்றியென அழுது தொழும் அன்பர்தம் சிந்தையிற் குடி கொள்ளுவர். விரும்பி வழிபடுவோர்தம் ஆவியைவிட்டு நீங்கார். மலர் பறித்து. இண்டை மாலை கட்டும் தொண்டரிடத்து இருப்பர். தம தடியார்களுடைய பாவங் தீர்ப்பார். பழிபோக்குவார். நல்லடியார் இறைவரைத் தம் செல்வம் எனப்பாராட்டுவர்.

3. அடையாளம் [124 (3)]:- ஒருவரால் உவமை கூற இயலாத அரிய மேனியை உடையார். இரு மாதர்களை ஆதரிப்பார். பல பூதமும் பேய்களும் அவரைச் சூழ்ந்திருக்கும். வெண்டலை கையிற் பிடித்து மனைதோறும் பலிக்கு என்று வருவார். இவையே இறைவர்தம் அடையாளம்.

4. அந்தணரும் (மறையோரும்) சிவனும் [124, (5) (6) (88)]:- இறைவரே அந்தணர், அந்தணர்தம் தந்தை, அந்தணர்தம் அல்லல் தீர்ப்பவர், அந்தணர் சிந்தை செய்ய அவரை விரும்புகின்றவர், அந்தணர்தம் பாவனையை விரும்பும் முதல்வர்.

5 அரியர் [124 (7)]:- இறைவர்தம் அந்தம், ஆதி, அயனுக்கும் மாலுக்கும் தேவர்க்கும் எவர்க்கும் அறிய முடியாதவை. இறைவர் அரிய காட்சியர். அவர் இன்ன உருவினர், இன்ன நிறத்தினர் என அறிய முடியாது. உள்ளே நிலவும் ஆவியாய் ஒங்கும் அவர் தன்மையைத் தேவரும் அறிகிலார். இறைவர் வேத வேதாந்தர். கீழுலகும் மேலுலகும் ஒங்கும் அவர் தோற்றம் காண அரியது. அவர் உணர்ந்தார்க்கும் உணர்வு அரியார். ஒதியாரும் அவரை அறிந்தாரில்லை. ஓருடம்பில் இரண்டு உருவினர். அவரைக் கிட்டுதல் யார்க்கும் மிக அரிது. அவர் செய்வன யாராலும் அறிய ஒண்ணா, அவரை யாரும் தேடுவர். அவரை நினைக்கப் பிறவி நாசமாம். மதிலெரித்த அவர் திறத்தைக் கருதினால் அவர் இன்னரெனக் கூறுதல் பெரிதும் அரிது. அவரை நண்ணுதல் யார்க்கும் அரிது.