பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

தமிழரசுக் கழகம்

அண்மையில் தமிழரசுக் கழகத் தலைவர் ம. பொ. சி. "செங்கோலில்" எழுதிய ஒன்றிரண்டு கட்டுரைகளில், ராஜ்ய சீரமைப்பைப் பொருத்தவரை மாற்றுக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பற்றிய அவருடைய நிர்ணயிப்பைக் கொடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களான காமராஜ், கக்கன், சுப்ரமண்யம், பக்தவத்சலம் ஆகியவர்கள் கூறிய கருத்துக்களை அலசி, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்களென்றும், நேர்மையாகப் போராடவில்லை யென்றும், எடுத்துக்காட்டியிருக்கிறார். அவர்கள் இன்று ராஜ்யச் சீரமைப்புக்கும் எல்லை வகுப்புக்கும் ஆதரவாகக் கூறுவதெல்லாம் தங்கள் தலைமையை—செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதப் போக்கு என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஈ.வே.ரா. அண்ணாத்துரை ஆகிய தி.க., தி.மு.க. தலைவர்களின் முன் பின் கருத்துக்களை எடுத்துக்காட்டி, அவர்களுடைய முன்னுக்குப்பின் முரண்பட்ட பேச்சுக்களின் சமயோசித வாத பலவீனத்தைப் புட்டுப் புட்டுக் காட்டியிருக்கிறார். என்னுடையவும், ராமமூர்த்தியினுடயவும் சட்டசபைப் பேச்சுக்களை புரியாத புதிர் என்று மதிப்பிட்டிருக்கிறார். தேவிகுளம்—பீர்மேடு பற்றிய எனது முதல் கட்டுரையை "ஜீவானந்தம் மழுப்புகிறார்" என்ற தலைப்பில் கண்டித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி தேச நலனைவிடக் கட்சி நலனையே பெரிதாகக் கருதக்கூடியதென்றும் குற்றஞ் சாட்டியுள்ளார்.

தமிழரசுக் கழகத் தலைவர் மாற்றுக் கட்சிக்காரர்கள் எல்லோருடைய நேர்மையின் மீதும் சகட்டுமேனிக்கு கரும்புள்ளி செம்புள்ளி தீட்டிக் காட்டுகிறார். நல்லது, காட்டட்டும்! தாமும் தமிழரசுக் கழகமும் மட்டுமே, அப்பழுக்கற்ற தமிழ் ராஜ்யவாதிகள் என்று தருக்கிச் செருக்கி, கண்ணாடிக் கூண்டிலிருந்துகொண்டு மற்றவர்மீது கல்லெறியவில்லையென்று துணிச்சல் கொள்கிறார். நல்லது, கொள்ளட்டும்.

வடக்கே சித்தூர் ஜில்லாவில் ம.பொ.சி.யின் தமிழக எல்லை நிர்ணயத்தையும், ஆறு தாலூகாப் போராட்டத்தையும், திருப்பதிப் போராட்டத்தையும் தமிழ்மக்கள் அறிவார்கள். தெற்கேயும் திரு—கொச்சியிலுள்ள ஒன்பது தாலூகாக்களையும் குறிப்பாக தேவிகுளம்—பீர்மேடு தாலூகாக்களையும் 'வெட்டொன்று துண்டிரண்டாக'க் கோரி தமிழரசுக் கழகத் தலைவர் போர்முழக்கம் செய்துவிட்டாரல்லவா? இங்கும் தமிழ்மக்கள் ம.பொ.சி.யின் எல்லை நிர்ணயத்தையும் போராட்டப் போக்கையும் அறியத்தான் போகிறார்கள்! ஐயமில்லை.

தனியே சுமக்க முடியாது!

ம.பொ.சி.யின் கோரிக்கை நியாயமும், வரையறுப்பு வன்மையும், அவருடைய, முடிந்தால் தாலூகா, முடியாவிட்டால் கிராமம்