பக்கம்:தைத் திங்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

87

பலர்க்குச் சொல்லித் தெரிய வைக்க வேண்டிய நிலையில் உள்ளது. மார்கழி நீராடலும் மார்கழி நோன்புமே இப்போது பலராலும் அறியப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், தைத் திங்கள் நோன்பின் முன்னாயத்தமாக மார்கழியிலிருந்தே வைகறையில் நீராடி வழிபாடு செய்யத் தொடங்கியமையாகத்தான் இருக்கக்கூடும்.மார்கழியில் தொடங்கப்பட்ட நோன்பு தைத் திங்களில் முற்றி முதிர்ந்து முடிவு பெற்று வந்தது. பொங்கல் போனதும் நோன்பும் முடிவுக்கு வருவதால், மக்கள் தைத் திங்கள் முழுமையும் இல்லாத 'தை' நோன்பை நழுவ விட்டு மார்கழி நோன்பை இறுகப் பிடித்துக் கொண்டனர் போலும்! மார்கழித் திங்களில் செய்யும் செயல்கள் எல்லாம் தைத் திங்களுக்காகச் செய்யப்படும் ஒருவகை முன்னாயத்தமாகும் -என்னும் கருத்து முன்பே விளக்கப்பட்டுள்ளது. முன்னாயத்தமாக மார்கழியில் தொடங்கிய வைகறை நீராடலும் வைகறை வழிபாடும் இன்று நிலைத்துவிட்டன. இதற்கு உறுதுணையாய் நிற்பன ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம் பாவை-திருப்பள்ளியெழுச்சியுமாகும் எனலாம்.

பாவைப் பாட்டு

ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல் கொண்டது. மார்கழி பிறந்ததும் வைணவர்களால் நாளுக்கொரு பாடல் வீதம் விளக்கவுரை யாற்றப்படுகிறது. சிறப்பாக நாளுக்கு ஒரு பாடல் இடம் பெறினும் திருப்பாவையை நாடோறும் ஓதுவதும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/104&oldid=1323536" இலிருந்து மீள்விக்கப்பட்டது