பக்கம்:தைத் திங்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 தைத் திங்கள்


திங்கள் முதல் நாள் தொழிலாளர் நாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவிலும் தொழிலாளர்கள் உணவளிக்கப்பட்டும், புத்தாடை, பணம் முதலியன பரிசளிக்கப்பட்டும் பாராட்டப் பெறுகின்றனர். காணும் பொங்கலிலிருந்து தொழிலாளர் வேலை செய்வதில்லை. சில நாள் ஓய்வெடுத்த பின்னர் நல்ல நாள் பார்த்து வேலை தொடங்குவர். இஃதொன்றே, பொங்கல் விழா தொழிலாளர் விழா என்பதற்குப் போதிய சான்றாகும். இந்தக் காலத்தில் 'மே' (May) முதல் நாள் முழு ஊதியத்துடன் தொழிலாளர்க்கு விடுமுறையளிக்கப் படுவது ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது.

தேசீய விழா:

ஒவ்வொரு நாட்டிலும் தேசீய விழா என்னும் பெயரில் கொண்டாட்டங்கள் நடைபெறுவதுண்டு. பொங்கல் விழா தமிழர்களின் தேசீய விழா என்பது, "நாட்டு விழா' என்னும் தலைப்பில் முன்பு (பக்கம்-7) விளக்கப்பட்டுள்ளமை காண்க.

தெய்வ விழா;

உலகெங்கணும் தெய்வங்களின் பெயரால் விழா நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. பொங்கல் விழாவில் பல்வேறு தெய்வங்களுக்கும் படையல் நடை பெறுவதாலும், தொடர்ந்து தைத் திங்களில் பல்வேறு தெய்வத் திருவிழாக்கள் நடைபெறுவதாலும், தைத் திங்கள் தெய்வத் திருவிழாவிற்கும் பெயர் பெற்ற தாகும். இது முன்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/127&oldid=1321676" இலிருந்து மீள்விக்கப்பட்டது