பக்கம்:தைத் திங்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

113


கணி நூலார் (சோதிடர்கள்) உலகப் பெரு வெளியைப் பன்னிரண்டு கட்டங்களாகப் பிரித் துள்ளனர். ஒவ்வொரு கட்டத்திற்கும் இராசி எனப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. அப்பன்னிரண்டு இராசி களும் வருமாறு: மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்-என்பனவாகும், இந்த இராசிகள் கோள்களின் (கிரகங்களின்) வீடுகள் எனப்படும். ஞாயிறு என்னும் தலைமைக் கோள் ஒவ்வொரு இராசியிலும் ஒரு திங்கள் (மாச) காலம் இருப்பான். திங்களுக்கு ஒரு முறை இராசி விட்டு இராசி மாறிக் கொண்டேயிருப்பான். இராசி மாறும்போது திங்களின் (மாதத்தின்) பெயரும்மாறும். இந்த அடிப்படையின்படி ஒவ்வோர் இராசிக்கும் உரிய திங்கள் வருமாறு: மேடம் - சித்திரை; இடயம்-வைகாசி; மிதுனம்-ஆனி; கடகம்-ஆடி; சிம்மம்-ஆவணி; கன்னி-புரட்டாசி; துலாம்-ஐப்பசி; விருச்சிகம் - கார்த்திகை; தனுசு-மார்கழி; மகரம்- தை; கும்பம்-மாசி; மீனம் - பங்குனி ஆகும். ஒவ்வோர் இராசிக்கும் உரிய திங்கள் இன்னது என்பது நினைவில் இருக்க வேண்டும்.

ஞாயிறு இராசி விட்டு இராசி மாறும் போதெல்லாம் சங்கிராந்தி என்று சொல்லின், ஓர் ஆண்டில் பன்னிரண்டு சங்கிராந்திகள் இருக்கும். ஆனால் அவ்வாறு கூறுவதில்லை. ஞாயிறு மிதுனத்திலிருந்து கடகத்திற்கு வரும்போது கடக சங்கிராந்தி எனவும், தனுசிலிருந்து மகரத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/130&oldid=1321682" இலிருந்து மீள்விக்கப்பட்டது