பக்கம்:தைத் திங்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தைத் திங்கள்

வீடும் வெளியும்:

வீட்டிற்கு வெளியே சென்றிருப்பவர்கள்-வெளி யூருக்குச் சென்றிருப்பவர்கள் - வெளிநாட்டுக்குச் சென்றிருப்பவர்கள் பொங்கல் மாதம் எனப்படும் தைத் திங்களில் விரைந்தோடி வந்து வீடு சேர்வது, பண்டைய தமிழ்நாட்டு மரபு. இதிலிருந்து, பண்டைத் தமிழர்கள் பொங்கல் நாளை மிகவும் இன்றியமையாத தாகக் கொண்டாடினர் என்பது புலப்படும்.

ஒரு குடும்பத் தலைவன் வீட்டில் இல்லை-வேற்று நாட்டில் இருக்கிறான், அவன் ஒரு படை மறவன், வேற்று நாட்டின்மேல் படையெடுத்துச் சென்றுள்ள தன் மன்னனது பாசறையிலே உருவிய வாளுடன் உறக்கம் இன்றிக் காவல் காத்து நிற்கிறான். அப்போது அவனுக்குத் தன் நாட்டின்மேல்-தன் ஊரின் மேல்-தன் வீட்டின்மேல் படிப்படியாக நினைவு படர்கிறது. தன் இல்லக் கிழத்தியை எண்ணிப் பார்க்கிறான். அறுபதாம் திருமணம் ஆனவர்களே பிரிவின்போது மனைவியை நினைத்துக்கொண்டிருக் கையில், அண்மையில் திருமணமான அந்தக் கடமை வீரன் மனைவியை நினைக்காமல் இருக்க மரக் கட்டையா என்ன! களத்திலே நின்று கொண்டிருக்கும் கடமை வீரன் ஏன் இப்பொது மனைவியை நினைக்க வேண்டும்? அவன் நினைக்கும் காலமோ தைத் திங்கள் தைப் பொங்கல் நாள்; எனவே அவன் நினைக்க மாட்டானா என்ன! அவன் தனக்குத் தானே பேசிக்கொள்கிறான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/23&oldid=1323586" இலிருந்து மீள்விக்கப்பட்டது