பக்கம்:தைத் திங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தைத் திங்கள்


மதுரைக் காஞ்சி:

"வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப" (அடி-284)
"வல்லோன் தைஇய வரிப்புனை பாவை (723)


குறிஞ்சிப் பாட்டு:

'பைவிரி அல்குல் கொய்தழை தைஇ’ (அடி-102)

மேலுள்ள சங்க நூல் ஆட்சிகளில் 'தை' என்னும் சொல், எல்லாத் துறை ஒப்பனைகளையும் (அணிஅலங்காரங்களையும்) குறிக்கப் பயன்படுத்தப் பட்டிருப்பது காண்க, ஒப்பனைக்குப் பேர்போன ஒரு திங்கள் 'தைத்திங்கள்’ என வழங்கப்படுவதின் பொருத்தம் இப்போது புலனாகலாம்.

உடை ஒப்பனை செய்யும் கலைக்குத் 'தையல்' என்னும் பெயர் வழங்கப்படுவதும், ஒப்பனை செய்பவரும் செய்து கொள்பவருமாகிய பெண்டிர் 'தையலார்' எனப் பெயர் வழங்கப்படுவதும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலன. தையல் என்னும் சொல் அலங்காரம்-ஒப்பனை என்னும் பொருளில் வழங்கப் பட்டிருக்கும் ஆட்சியை.

"தாதுசெய் பாவை யன்ன தையல்
மாதர் மெல்லியல் மடநல்லோள் (392)


என்னும் அகநானூற்றுப் பாடல் பகுதியிலும்,

  'தையல் மகளிர் ஈரணி புலர்த்தர' (11)

என்னும் பரிபாடல் பகுதியிலும், திருக்கோவையார் உரையில் பேராசிரியர் 'தையல் பாங்கி ஐயம் உற்றது'. என்பதனை விளக்குகையில் 'தையல்' என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/39&oldid=1323603" இலிருந்து மீள்விக்கப்பட்டது