பக்கம்:தைத் திங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை


பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் 'உலகு உய்ய’ என்ற நூலின் ஆய்வு 27-6-1999 அன்று புதுச்சேரியில் நடை பெற்றது. நூலாய்வு நிகழ்ச்சிக்கு வந்திருந்த முனைவர் இரா. திரு முருகன் அவர்கள் பேராசிரியர் சுந்தர சண்முக னார் பல துறைகளில் நூல் எழுதியவர் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு, ஒரு சமயம், 'தமிழாசிரியர்களுக்குத் தமிழ் தவிர வேறு என்ன தெரியும்? என்று யாரோ குறை கூறிய போது பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் தைத் திங்கள் நூலினைப் படித்துப் பாருங்கள்; தமிழாசிரியர்களுக்குத் தமிழைத் தவிர பிற துறைகளிலும் புலமை உண்டு என்று புரியும்’ என்று பதிலளித்ததாகக் கூறினார்.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த, பேராசிரியரின் ஐம்பத்து மூன்றாவது வெளியீடாக 1972-ஆம் ஆண்டு வெளியான தைத் திங்கள் நூலின் இரண்டாம் பதிப்பு தற்போது தங்கள் திருக்கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. முப்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்நூலைத் தம் பொருட் செலவில் வெளிக்கொணர்ந்தவர் பேராசிரியருடன் ஏறத்தாழ 60 ஆண்டுகள் நெருங்கிப் பழகிய "பிரஞ்சு தமிழ் ஆய்வு மாமணி", "சிறுவர் மனச்செம்மல்." பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கள் ஆவர். இறந்த ஒரு நூலாசிரியரின் நூலை மறு வெளியீடு செய்வது என்பது இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிப்பது போலாகும். இந்நூலை வெளியிடுவதன் மூலம் பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கள் நூலாசிரியரான பேராசிரியர் சுந்தர சண்முகனாரை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/5&oldid=1319949" இலிருந்து மீள்விக்கப்பட்டது