பக்கம்:தைத் திங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 37

இலை போடுவர். சில இடங்களில்-சில குடும்பங்களில் பூசணி இலை போடுவர். பின்னர் உணவு வகைகள் பரிமாறப்பெறும். அப்பொழுது மிகுதியாய் விளையும் பூசணி, வள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்கு முதலிய கறிவகைகள் சிறப்பிடம் பெறும். கரும்பு, மஞ்சள் கொத்து, நெற்கதிர் முதலியனவும் உரிய இடம்பெறும் படைக்கும்போது 'பொங்கலோ பொங்கல்; பொங்கலோபொங்கல்' என அனைவரும் மங்கல முழக்கம் செய்வர். திறந்த வெளியாதலின் கதிரவன் நன்கு தெரிவான். கதிரவனுக்குக் காட்டிப் படையல் செய்யப் பெறும். ஞாயிறாலேயே மழை பெய்து பயிர் விளைவதால் இந்தப் படையலை ஞாயிற்றுக்கு உரியதாகச் சொல்வது மரபு. நன்றிக்கடன் செலுத்தும் ஞாயிறு விழாவாகும் இது.'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்பது சிலப்பதிகாரம் அல்லவா?

பகுத்துண்ணுதல்:

பகுத்துண்ணுதல், பல்லாரோடு உண்ணுதல் என்றெல்லாம் இலக்கியங்களில் படித்திருப்பதைப் பொங்கல் விழாவில் நடைமுறையில் காணலாம். அன்று உறவினர்க்கும் தொழிலாளர்க்கும் ஏழையர்க்கும் இரவலர்கட்கும் உணவு அளிக்கப்பெறும். ஒரு விருந்து போலவே பலரும் வரிசையாய் அமர்ந்து உண்பர். பெரிய பானை வைத்துப் பொங்கல் செய்வதற்குப் 'பெரும் பொங்கல் இடுவது' என்று பெயராம். ஓர் ஊரிலேயே எல்லா வீடுகளிலும் இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/54&oldid=1323629" இலிருந்து மீள்விக்கப்பட்டது