பக்கம்:தைத் திங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 தைத் திங்கள்


பொட்டிட்டு மாலை யணிவிப்பார்கள். கொம்புகளைச் சீவி அழகிய வண்ணம் தீட்டுவர். கொம்புகளில் நெற்கதிர், ஓலை முதலியவற்றாலான 'கொம்பரணை' வளையம் மாட்டுவர். கழுத்தில் சதங்கையும் மணியும் கட்டுவர். மாட்டு வண்டி வைத்திருப்பவர்கள் வண்டியையும் ஒப்பனை செய்வர். அன்று மாலை, முதல் நாள் போலவே பொங்கல் செய்து மாட்டுக்குப் படைத்து, பொங்கலை மாடு உண்ணும்படிச் செய்வர். இதுதான் உண்மையான படையல். கடவுளர்க்குச் செய்யும் மற்ற படையல்கள் எல்லாம் பொய்ப் படையல்களே. எந்தப் படையலையும் எந்தக் கடவுளும் உண்ணுவ தில்லை. கடவுளின் பெயரால் மக்களே உண்கின்றனர். ஆனால், மாட்டுக்குப் படைப்பதை மாடே உண்பது ஒரு சிறப்பன்றோ!

மாடு மிரட்டல்:

சிலர் மாட்டின் கழுத்தில் மாவிலை-வேப்பிலை மாலையும், தேங்காய் மூளியும் கரும்புத் துண்டு மாலையும்,நெற்கதிர் மாலையும், பிறவும் கட்டியிருப்பர். படையல் முடிந்ததும், கழுத்திலே கட்டியுள்ள பொருள்களுடன் மாடுகளை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து தெருவில் ஓட்டிச் செல்வர். மாடுகள் வீட்டை விட்டு வெளியே வரும்போது. இளைஞர்கள் சிலர் போட்டி போட்டுக் கொண்டு, அவற்றின் கழுத்திலுள்ள தேங்காய் மூளி, கரும்பு மாலை முதலியவற்றை அறுத்து எடுத்துக் கொள்வர். இதிலே ஒருவர்க்கொருவர் முனைந்து வீரம் காட்டுவர். சில மாடுகள் தம் கழுத்தில் உள்ளவற்றை அறுக்க விடாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/59&oldid=1323636" இலிருந்து மீள்விக்கப்பட்டது