பக்கம்:தைத் திங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

43


கொம்புகளால் முட்ட முயலும், துணிவு மிக்க இளைஞர்கள் மாட்டின் கொம்பை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொருகையால் கரும்பு மாலையை அறுப்பர். இதிலே அவர்களுக்குப் பெருமை மிகுதி. நான் இத்தனை மாட்டின் கழுத்திலிருந்து அறுத்தேன்-அத்தனை மாட்டின் கழுத்திலிருந்து அறுத்தேன் என்றெல்லாம் இளைஞர்கள் பெருமையடித்துக் கொள்வர்.

ஒப்புக்கு மாடுகளைச் சிறிது தொலைவு ஓடவிட்டுத் திருப்பிக்கொண்டு வருவர் சிலர். ஊர் முழுதும் சுற்ற விடுவர் சிலர். வண்டி வைத்திருப்பவர்கள் வண்டியில் மாட்டைப் பூட்டி ஊரை ஒரு முறை சுற்றி வருவர். சிறார்கள் வண்டியில் ஏறி அடைத்துக் கொண்டுநிரம்பி வழிவர்.இவ்வாறாக மாடுகள் ஊர்வலம் வரும்பொழுது பொங்கலோ பொங்கல்,'மாட்டுப் பொங்கலோ பொங்கல்' 'பொங்கல் சட்டி-பொங்கல் பானைபொங்கலோ பொங்கல்' என்று சிறார்கள் விண்ணதிர முழங்குவர்.

இவ்வாறு மாடுகளைத் தெருவிலே ஓட விட்டுக் கொண்டு வருவதற்கு 'மாடு மிரட்டல்'என்று பெயர் வழங்கப்படுகிறது. சில இடங்களில் கொட்டு முழுக்குடன் நடைபெறுவதும் உண்டு. அன்றைய புதிய சூழ்நிலையால் மாடுகள் மிரண்டுவிடு கின்றனவாதலின், இதற்கு 'மாடு மிரட்டல்' என்னும் பெயர் வழங்கப்பட்டது போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/60&oldid=1323637" இலிருந்து மீள்விக்கப்பட்டது