பக்கம்:தைத் திங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 தைத் திங்கள்

மந்தை வெளி விழா:

அவரவர்கள் தத்தம் வீடுகளிலிருந்து தனித்தனியே ஓட்டிச் சென்று மாடு மிரட்டுவது சில இடங்களில் நடை பெறுகிறது. வேறு சில ஊர்களில் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஓட்டிச் சென்று பொதுவாக மாடு மிரட்டுவது மரபாயுள்ளது. சிற்றூர்களில் மாலையில் கோயிலிலிருந்து இறையுருவம் அணி செய்யப்பெற்று ஊர்வலமாகத் தெருவாரியாக வரும். மாடு உடையவர்கள் மாடுகளை ஒப்பனை செய்து ஆயத்தமாயிருப்பார்கள். இறையுருவம் தம்இல்லத்திற்கு எதிரே வந்ததும் தம் மாடுகளை வெளிக்கொணர்ந்து ஊர்வலத்தோடு சேர்ப்பர். இப்படியாக எல்லார் வீட்டுமாடுகளும் முறையே ஊர்வலத்தில் சேர்க்கப் பெற்று இறுதியில் ஊர்ப்பொது மந்தை வெளியை யடையும். ஒரு தெய்வத் திருவிழா போலவே படையல் நடக்கும். மஞ்சள் நீர் தெளித்தல் முதலிய மங்கல மகிழ்ச்சி நிகழ்ச்சிகளும் நடைபெறும். பின்னர் அவரவரும் தத்தம் மாடுகளைத் தத்தம் இல்லத்திறகுக் கொண்டுவந்து சேர்ப்பர். இவ்வாறு நடைபெறுகிற மாடு மிரட்டல், ஒரு சிறப்பு விழாவாக ஊரார்க்கு மகிழ்ச்சியளிப்பதோடு, ஊராரின் ஒற்றுமை யுணர்வையும் புலப்படுத்துகின்றதன்றோ?

மஞ்சு விரட்டு:

சில இடங்களில் - குறிப்பாகத் தென் தமிழ் நாட்டில் 'மஞ்சு விரட்டு' என்னும் விழா நடைபெறும். இது 'சல்லிக்கட்டு' எனவும் பெயர் வழங்கப்பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/61&oldid=1323639" இலிருந்து மீள்விக்கப்பட்டது